லார்ட்ஸ் டெஸ்ட்.. முதல் இன்னிங்ஸில் சுருண்டது இங்கிலாந்து.. ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டும் காலி

By karthikeyan VFirst Published Aug 16, 2019, 10:53 AM IST
Highlights

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 77.1 ஓவரில் 258 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் கடந்த 14ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக முதல்நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து இரண்டாம் நாளான நேற்று டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய், ரன்னே எடுக்காமல் இரண்டாவது ஓவரிலேயே ஹேசில்வுட்டின் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் பர்ன்ஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட், பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றார். ஆனால் ரூட்டை 14 ரன்களில் ஹேசில்வுட் பெவிலியனுக்கு அனுப்பினார். ’

அதன்பின்னர் பர்ன்ஸும் டென்லியும் சேர்ந்தும் நீண்டநேரம் களத்தில் இருந்தனர். நன்றாக நிலைத்து ஆடிக்கொண்டிருந்த டென்லி, 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரைசதம் அடித்த பர்ன்ஸை 53 ரன்களில் பாட் கம்மின்ஸ் வீழ்த்தினார்.

இவர்களை தொடர்ந்து ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் நிலைக்கவில்லை. அவர்களும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பட்லர் 12 ரன்களிலும் ஸ்டோக்ஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 138 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் ஆடிய பேர்ஸ்டோவும் வோக்ஸும் ஓரளவிற்கு நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர். எட்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 60 ரன்களை சேர்த்தனர். வோக்ஸ் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஆர்ச்சர் மற்றும் பிராட் முறையே 12 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த பேர்ஸ்டோ 52 ரன்களில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 77.1 ஓவரில் 258 ரன்களுக்கு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர், வெறும் 3 ரன்களில் நடையை கட்டினார். கடந்த போட்டியில் சரியாக ஆடாத வார்னர், இந்த போட்டியிலும் ஏமாற்றமளித்தார். இதையடுத்து பான்கிராஃப்ட்டுடன் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. பான்கிராஃப்ட்டும் கவாஜாவும் களத்தில் உள்ளனர். 

click me!