வி.பி.சந்திரசேகர் தற்கொலையின் பின்னணி என்ன..? முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்

By karthikeyan VFirst Published Aug 16, 2019, 9:49 AM IST
Highlights

கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர். 1961ம் ஆண்டு பிறந்த இவர், தமிழக அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். 

தமிழக அணியில் ஜொலித்த இவர், சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்கவில்லை. 1988ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டுவரை வெறும் 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி 88 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், வர்ணனையாளர், ஆலோசகர் என தொடர்ந்து கிரிக்கெட்டிலேயே இருந்தார். 

தமிழ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக இருந்துவந்தார். உலக கோப்பை தொடரின்போது கூட, வர்ணனை செய்தார். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளர் விபி சந்திரசேகர் தான். 

சென்னை மயிலாப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார் சந்திரசேகர். நேற்று மாலை 5.45 மணிக்கு டீ அருந்துவிட்டு தனது அறைக்குள் சென்ற சந்திரசேகர், வெகுநேரமாகியும் வெளியே வராததால் கதவை உடைத்து குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் சந்திரசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

விபி சந்திரசேகர் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. அவரது வீடு முதற்கொண்டு அடமானத்தில் இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு கூட, அவர் கடன் வாங்கிய வங்கியிலிருந்து அவருக்கு நோட்டீஸ் வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடி தான் தற்கொலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. 

click me!