
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், கேகேஆர் - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 156 ரன்கள் அடித்தது. பாண்டியா 49 பந்தில் 67 ரன்கள் அடித்து 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். டெத் ஓவரில் அவர் களத்தில் இல்லாததால் அணியின் ஸ்கோர் உயராமல் நின்றதுடன், அவர் ஆட்டமிழந்த பின்னர் 5 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் அணி. அதில் 4 விக்கெட்டுகள், இன்னிங்ஸின் கடைசிஒரே ஓவரில் ஆண்ட்ரே ரசல் வீழ்த்தியது.
கடைசி ஓவரை வீசிய ஆண்ட்ரே ரசல், அந்த ஓவரில் அபினவ் மனோகர்(2), ராகுல் டெவாட்டியா(17), ஃபெர்குசன் (0) மற்றும் யஷ் தயால்(0) ஆகிய நால்வரையும் வீழ்த்தினார். இதன்மூலம், ஐபிஎல்லில் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய 3வது பவுலர் என்ற சாதனையை ஆண்ட்ரே ரசல் படைத்துள்ளார்.
ஐபிஎல்லில் இதற்கு முன், 2 வீரர்கள் மட்டுமே ஒரு ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். 2013 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸுக்கு எதிராக அமித் மிஷ்ரா ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதன்பின்னர் இந்த சீசனில் கேகேஆருக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடும் யுஸ்வேந்திர சாஹல் ஒரு ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஷ்ரா, சாஹலுக்கு அடுத்த இந்த சாதனையை படைத்த 3வது வீரர் ஆண்ட்ரே ரசல் ஆவார். அமித் மிஷ்ரா மற்றும் சாஹல் ஆகிய இருவருமே ஸ்பின்னர்கள். ஒரு ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் மிதவேகப்பந்துவீச்சாளர் ரசல் தான்.