KKR vs GT: தனி ஒருவனாக போராடிய ரசல்..! செமயா பந்துவீசி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி.. புள்ளி பட்டியலில் முதலிடம்

By karthikeyan VFirst Published Apr 23, 2022, 7:47 PM IST
Highlights

கேகேஆருக்கு எதிரான போட்டியில் 8 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.
 

ஐபிஎல் 15வது சீசனில் இன்று பிற்பகல் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த போட்டியில் கேகேஆரும் குஜராத் டைட்டன்ஸும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், லாக்கி ஃபெர்குசன், யஷ் தயால், முகமது ஷமி.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ்(விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், டிம் சௌதி, ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 7 ரன்னுக்கு ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தொடக்கம் முதலே அடித்து ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ரிதிமான் சஹா 25 பந்தில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர் 27 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். சஹா, மில்லர் ஆகியோருக்கு நல்ல தொடக்கம் கிடைத்தபோதிலும், அதை அவர்கள் பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. 

ஆனால் சிறப்பாக பேட்டிங் ஆடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தார். 49 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் அடித்து ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபின்னர் அணியின் ஸ்கோர் உயரவே இல்லை. அதன்பின்னர் 5 விக்கெட்டுகள் விழுந்தன. ஹர்திக் பாண்டியா அவுட்டான அதே 18வது ஓவரில் ரஷீத் கானும் டக் அவுட்டாக, கடைசி ஓவரை வீசிய ஆண்ட்ரே ரசல், அந்த ஓவரில் அபினவ் மனோகர்(2), ராகுல் டெவாட்டியா(17),  ஃபெர்குசன் (0) மற்றும் யஷ் தயால்(0) ஆகிய நால்வரையும் வீழ்த்தினார். 20 ஓவரில் 156 ரன்கள் அடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

157 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக சாம் பில்லிங்ஸும் சுனில் நரைனும் இறங்கினர். சாம் பில்லிங்ஸ்(4) மற்றும் சுனில் நரைன்(5) ஆகிய இருவரையுமே ஒற்றை இலக்கத்தில் வீழ்த்தினார் ஷமி. ஷமி, ஃபெர்குசன், அல்ஸாரி ஜோசஃப், ரஷீத் கான் என மிரட்டலான பவுலிங் யூனிட்டை கொண்ட குஜராத் டைட்டன்ஸிடம் சரணடைந்தது கேகேஆர் அணி.

நிதிஷ் ராணா 2 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 12 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ஆடிய ரிங்கு சிங் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயரும் 17 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தனி ஒருவனாக அடித்து ஆடி போராடிய ஆண்ட்ரே ரசலை கடைசி ஓவரில் அல்ஸாரி ஜோசஃப் வீழ்த்த, 8 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. ரசல் 25 பந்தில் 6 சிக்ஸர்களை விளாசி 48 ரன்களை அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
 

click me!