IND vs NZ மற்றுமொரு சொதப்பல்.. இந்திய அணியில் இடத்தை இழக்கும் அபாயத்தில் ரஹானே..!

By karthikeyan VFirst Published Nov 25, 2021, 2:50 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மீண்டும் பேட்டிங்கில் சொதப்பினார் அஜிங்க்யா ரஹானே. முதல் நாள் ஆட்டத்தின் 2வது செசன் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 154  ரன்கள் அடித்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆடாததால் அஜிங்க்யா ரஹானே கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 

இந்திய அணி:

மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதன்மை ஓபனர்களாக இறங்கிவரும் நிலையில் இந்த தொடரில் அவர்கள் ஆடாததால் ஓபனிங்கில் இறங்கும் வாய்ப்பை மீண்டும் பெற்ற மயன்க் அகர்வால், 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின்னர் ஷுப்மன் கில்லும் புஜாராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். சிறப்பாக ஆடிய கில் அரைசதம் அடித்தார். ஆனால் கிடைத்த தொடக்கத்தை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 52 ரன்களில் ஜாமிசனின் பந்தில் போல்டாகி வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு கில்லும் புஜாராவும் இணைந்து 61 ரன்கள் அடித்தனர்.

கில்லை தொடர்ந்து புஜாரா 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக போட்டியில் பொறுப்புடன் ஆடினார். அண்மைக்காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்பிவருவதால், ரஹானேவிற்கு மாற்று வீரரை தேர்வு செய்து ஆடவைக்க வேண்டிய நிலை வந்துவிட்டதாக கருத்துகள் வலுத்தன. 

ஆஸி., 2020-2021 சுற்றுப்பயணத்தில் ரஹானே கேப்டன்சியில் தான் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. ஆனால் அந்த தொடரில் ரஹானே வெறும் 268 ரன்கள்  மட்டுமே அடித்தார். அதன்பின்னர் இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் 18.66 என்ற மோசமான சராசரியுடன் வெறும் 112 ரன்களை மட்டுமே அடித்தார் ரஹானே. அதன்பின்னர் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரிலும் படுமோசமாக சொதப்ப, இந்திய அணியில் அவரது இடம் குறித்த விவாதங்கள் எழுந்தன. ரஹானேவை நீக்கிவிட்டு அவரது இடத்தில் இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் வலுத்தன.

ரஹானே இன்னும் டெஸ்ட் அணியில் ஆடுவது அவரது அதிர்ஷ்டம் தான் என்று கம்பீர் கருத்து கூறியிருந்தார். அப்படியான சூழலில், இந்த டெஸ்ட் தொடர் ரஹானேவை பொறுத்தமட்டில் தனிப்பட்ட முறையில் மிக முக்கியமான தொடர். 

அந்தவகையில்,  இந்த போட்டியில் சிறப்பாக தொடங்கி நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரஹானே, 63 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள் அடித்த நிலையில், ஜாமிசன் பந்தில் ஆட்டமிழந்தார். ரஹானேவிற்கு ஒரு பெரிய இன்னிங்ஸ் தேவை என்ற நிலையில், இன்று அவர் தொடங்கிய விதத்தை பார்க்கையில், அந்த பெரிய இன்னிங்ஸை ஆடி ஃபார்முக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஹானே மீண்டும் சொதப்பினார். ரஹானேவின் தொடர் சொதப்பலால் இந்திய டெஸ்ட் அணியில் அவரது இடத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

இன்றைய(25ம் தேதி) ஆட்டத்தின் முதல் செசனில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் அடித்த இந்திய அணி, 2வது செசனில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் அடித்தது. இதையடுத்து 2வது செசன் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயரும்(17*), ரவீந்திர ஜடேஜாவும்(6) களத்தில் உள்ளனர்.

click me!