#ENGvsIND அனுபவம்னா என்னனு காட்டிய அஜிங்க்யா ரஹானே; அபார அரைசதம்..!

Published : Aug 15, 2021, 09:58 PM IST
#ENGvsIND அனுபவம்னா என்னனு காட்டிய அஜிங்க்யா ரஹானே; அபார அரைசதம்..!

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில், இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து அணியை காப்பாற்றியுள்ளார் அஜிங்க்யா ரஹானே.  

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 5 ரன்னில் ஆட்டமிழந்த இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே, 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைப்போலவே அணியின் மற்றொரு சீனியர் வீரரான புஜாராவும் தொடர்ச்சியாக 10 இன்னிங்ஸ்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

முக்கியமான பேட்டிங் ஆர்டரான 3 மற்றும் 5ம் வரிசைகளில் இறங்கும் புஜாரா மற்றும் ரஹானேவின் தொடர் சொதப்பலால், இந்திய அணியில் அவர்களது இடத்தையே சந்தேகத்திற்குள்ளாக்கி கேள்வியும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில், 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறிய இந்திய அணியை அந்த மோசமான நிலையிலிருந்து மீட்டெடுத்தனர் அனுபவ வீரர்களான புஜாராவும் ரஹானேவும்.

முதல் இன்னிங்ஸ் முடிவில் 27 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ராகுல்(5), ரோஹித்(21), கோலி(20) ஆகிய மூவரின் விக்கெட்டையும் 55 ரன்களுக்கே இழந்தது. அடுத்த விக்கெட் விழுந்திருந்தால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்திருக்கக்கூட வாய்ப்புள்ளது.

ஆனால் அந்த இக்கட்டான நேரத்தில், பொறுப்பை உணர்ந்து பொறுமை காத்து தெளிவாக ஆடிய ரஹானேவும் புஜாராவும், 4ம் நாளான இன்றைய ஆட்டத்தின் 2வது செசனில் விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல் ஆடினர். 2வது செசன் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்திருந்தது. பார்ட்னர்ஷிப் அமையும் வரை அமைதி காத்த ரஹானே, 3வது செசனில் வேகமாக அடித்து ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்திவருகிறார்.

அபாரமாக ஆடிய ரஹானே, ஃபாஸ்ட் பவுலிங் மற்றும் மொயின் அலியின் ஸ்பின் ஆகிய இரண்டையும் திறம்பட எதிர்கொண்டு ஆடி ஸ்கோர் செய்து அரைசதம் அடித்தார். அணியில் இவரது இடம் குறித்து கேள்வியெழுப்பியவர்களுக்கு, தனது அனுபவம் மற்றும் திறமை என்னவென்பதை நிரூபிக்கும் வகையில் அரைசதம் அடித்துள்ளார். தன்னை விமர்சித்தவர்களுக்கு வாயால் பதிலடி கொடுக்காமல் பேட்டால் பதிலடி கொடுத்ததுடன், அணியையும் மோசமான நிலையிலிருந்து காப்பாற்றியுள்ளார் ரஹானே. ரஹானேவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடிவரும் புஜாராவும் அரைசதத்தை நெருங்கிவிட்டார்.
 

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!