ஐபிஎல் 16வது சீசனில் கேகேஆருக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 235 ரன்களை குவித்து, 236 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் போட்டியில் கேகேஆர் - சிஎஸ்கே அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
கேகேஆர் அணி:
நாராயண் ஜெகதீசன், ஜேசன் ராய், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், டேவிட் வீசா, குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் ஷர்மா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி 7.3 ஓவரில் 73 ரன்களை குவித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டெவான் கான்வே 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கி காட்டடி அடித்து ஈடன் கார்டனில் சிக்ஸர் மழை பொழிந்த அஜிங்க்யா ரஹானே 19 பந்தில் அரைசதம் அடித்தார்.
ஐபிஎல்லில் தனது அதிவேக அரைசதம் அடித்தார் ரஹானே. மேலும் ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை மொயின் அலியுடன் பகிர்ந்துள்ளார். 16 பந்தில் அரைசதம் அடித்த ரெய்னா முதலிடத்தில் உள்ளார். 19 பந்தில் அரைசதம் அடித்த ரஹானே 2ம் இடத்தை மொயின் அலியுடன் பகிர்ந்துள்ளார்.
அவருடன் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடிய ஷிவம் துபேவும் அரைசதம் அடித்தார். 21 பந்தில் 50 ரன்களுக்கு துபே ஆட்டமிழக்க, ஜடேஜா 8 பந்தில் 18 ரன்கள் அடித்தார். காட்டடி அடித்த ரஹானே 29 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்து கடைசிவரை நின்று இன்னிங்ஸை முடித்து கொடுக்க, 20 ஓவரில் 235 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி. ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் 3வது அதிகபட்ச ஸ்கோர் இது. இதற்கு முன் 246 மற்றும் 240 ரன்களை சிஎஸ்கே அணி குவித்துள்ளது.
IPL 2023: ஐபிஎல்லில் அடிச்ச அடி வீண் போகல.. இந்திய அணியில் இடம்பிடிக்கும் மும்பை இந்தியன்ஸ் வீரர்..!
236 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை கேகேஆர் அணி விரட்டுகிறது.