தோனி பாணியில் கேப்டன்சியை பாண்டியாவிடம் ஒப்படைங்க..! ரோஹித்துக்கு நெருக்கடி

By karthikeyan VFirst Published Jan 9, 2023, 3:26 PM IST
Highlights

தோனி டி20 கேப்டன்சியை விராட் கோலியிடம் ஒப்படைத்ததை போல, ஹர்திக் பாண்டியாவிடம் டி20 கேப்டன்சியை ஒப்படைத்துவிட்டு, ரோஹித் சர்மா ஒதுங்கவேண்டும் என்று அஜய் ஜடேஜா அறிவுறுத்தியுள்ளார்.
 

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என கடந்த ஆண்டு அடுத்தடுத்து 2 பெரிய ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோற்று ஏமாற்றமளித்த நிலையில், 2024ம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியின் கீழ் இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைத்து ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாண்டு டி20 உலக கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் வலுவான அணி கட்டமைக்கப்பட்டுவருகிறது.

ரோஹித் சர்மாவுக்கு அடுத்து துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுலோ, ரிஷப் பண்ட்டோ தான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் ஓரங்கட்டி ரோஹித்துக்கு அடுத்த கேப்டன்சி இடத்தை பிடித்தார் ஹர்திக் பாண்டியா. 

நான் இன்றைக்கு நல்ல கேப்டனா இருக்கேன்னா, அதுக்கு ஆஷிஷ் நெஹ்ரா தான் காரணம் - ஹர்திக் பாண்டியா

டி20 உலக கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்கள் டி20 போட்டிகளில் ஆடவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அந்த தொடரை 2-1 என வென்று கொடுத்தார். ஒருநாள் அணியிலும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா.

மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்கை கடந்து தனது கேப்டன்சி திறனையும் நிரூபித்தது ஐபிஎல்லில் தான். ஐபிஎல் 15 வது சீசனில் முதல்முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸுக்கு அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்து ஒரு கேப்டனாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியின் அடுத்த கேப்டன் இடத்தை பிடித்துவிட்டார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் வீரர்களை சிறப்பாக கையாண்டு இந்திய அணிக்கு தொடரை வென்று கொடுத்தார்.

கேப்டனாக இருப்பவர் மற்ற வீரர்களுக்கு அனைத்துவகையிலும் முன்மாதிரியாக இருக்கவேண்டும். குறிப்பாக ஃபிட்னெஸில் கேப்டன் தான் முன்மாதிரியாக இருக்கவேண்டும். ஆனால் ரோஹித் சர்மா ஃபிட்னெஸை பொறுத்தமட்டில் கேப்டன்சிக்கு தகுதியில்லாத வீரர் என்று கபில் தேவ் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவிடம் டி20 கேப்டன்சியை ஒப்படைத்துவிட்டு ரோஹித் சர்மா ஒதுங்க வேண்டும் என்று அஜய் ஜடேஜா அறிவுறுத்தியுள்ளார். 

ரோஹித் சர்மா கேப்டன்சிக்கே தகுதியில்லாத வீரர்..! கபில் தேவ் கடும் விமர்சனம்

இதுகுறித்து பேசிய அஜய் ஜடேஜா, ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்பதற்கு அவரது கேப்டன்சி ரெக்கார்டுகளே சான்று. ஆனால் ரோஹித் சர்மா டி20 கேப்டன்சியை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்க வேண்டும். தோனி கோலியிடம் சரியான நேரத்தில் டி20 கேப்டன்சியை ஒப்படைத்தார். தேர்வாளர்களோ, பிசிசிஐயோ தோனியிடம் கூறவில்லை. அவராகவே முன்வந்து சரியான நேரத்தில் கேப்டன்சியை கோலியிடம் கொடுத்தார். அதேபோல ரோஹித்தே முன்வந்து ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன்சியை ஒப்படைக்கவேண்டும் என்று அஜய் ஜடேஜா வலியுறுத்தியுள்ளார்.
 

click me!