
கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று மாலை 6 மணிக்கு ராஷ்மிகா மந்தனா, தமன்னா, கத்ரினா கைஃப் ஆகியோரது நடன நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதல் காரணமாக ஐபிஎல் தொடரில் கலை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. கொரோனாவுக்கு பிறகு 10 அணிகள் சொந்த மண்ணிலும், வெளியூரிலும் போட்டியை எதிர்கொள்கிறது.
இதனை கொண்டாடும் வகையில், தற்போது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. அதுமட்டுமின்றி ஹாலிவுட்டை மிஞ்சும் அளவிற்கு இந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவிற்கு தொழில்நுட்பத்தை பிசிசிஐ பயன்படுத்தியுள்ளது. அதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் கலை நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா, தமன்னா, கத்ரினா கைஃப், நடிகர் டைகர் செராஃப் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ட்ரோன் மூலம் லைட்டுகளை எறிய வைத்து அதனை ஐபிஎல் போன்ற வடிவத்தில் மைதானத்தில் பறந்து வருவது போன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது. இதற்காக ஏராளமான ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள 10 அணிகளின் கேப்டன்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். அதன் பிறகு , சரியான முறையில் போட்டியில் விளையாடுவதற்கான உறுதி மொழியையும் அணி கேப்டன்கள் ஏற்று கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.