இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்திய 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், அமெரிக்கா, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, உகாண்டா, ஓமன், கனடா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, நேபாள், பப்புவா நியூ கினி, பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடின.
இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இந்தியா தகுதி பெற்ற நிலையில் கடைசியாக இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியனானது.
ரோகித் சர்மா முதல் முறையாக இந்திய அணிக்கு டிராபி வென்று கொடுத்தார். இதற்கு முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் சீசனில் முதல் முறையாக தோனி டிராபி வென்று கொடுத்தார். இந்த உலகக் கோப்பைத் தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் 10ஆவது டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
இந்த தொடரானது பிப்ரவரி மாதம் நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடரிலும் 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இதில், இந்த தொடரை நடத்தும் அணிகள் என்ற அடிப்படையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முதல் 2 இடங்களை பிடித்துவிட்டன. மேலும், 7 அணிகள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 7 அணிகளும் 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக இடம் பெற்றுள்ளன. இந்த அணிகள் தவிர, டி20 அணிகளின் தரவரிசைப் பட்டியல் மூலமாக நியூசிலாந்து (6ஆவது இடம்), பாகிஸ்தான் (7ஆவது இடம்) மற்றும் அயர்லாந்து (11ஆவது இடம்) ஆகிய அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
இதன் மூலமாக ஒட்டு மொத்தமாக 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள் தவிர எஞ்சிய 8 இடங்களுக்கான அணிகள் தகுதி சுற்று போட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றன. இந்த 8 இடங்களில் ஐசிசி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு 2 இடங்களையும், அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா பசிபிக் நாடுகளுக்கு ஒரு இடத்தையும் ஒதுக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 20 அணிகளும் 4 பிரிவுகளாக 5 அணிகளாக பிரிந்து 4 போட்டிகளில் விளையாடும். இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இது குரூப் 1 மற்றும் குரூப் 2 என்று 2 பிரிவுகளாக 4 அணிகள் பிரிந்து விளையாடும். இதில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதில், குரூப் 1ல் முதல் இடம் பிடித்த அணியானது குரூப் 2ல் 2ஆவது இடம் பிடித்த அணியுடன் முதல் அரையிறுதிப் போட்டியில் விளையாடும். இதே போன்று தான் குரூப் 1ல் 2ஆவது இடம் பிடித்த அணியானது குரூப் 2ல் முதலிடம் பிடித்த அணியுடன் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் மோதும். கடைசியாக இறுதிப் போட்டி.
இதுவரையில் நடைபெற்ற 9 டி20 உலகக் கோப்பை தொடர்களில் தொடரை நடத்திய அணிகள் ஒரு முறை கூட டிராபியை வென்றதில்லை. மேலும், தொடரை நடத்திய அணிகள் ஒன்று குரூப் சுற்றுடன் வெளியேறும், இல்லையென்றால் சூப்பர் 8 சுற்றுடன் நடையை கட்டும். இதுதான் இப்போது வரை நடந்திருக்கிறது. ஆனால், 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.