கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பையின் 37ஆவது லீக் போட்டியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவை 83 ரன்களுக்கு ஆள் அவுட் செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முக்கியமான 37ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். இந்திய அணி 5 ஓவர்களிலேயே 60 ரன்களை கடந்துவிட்டது. விராட் கோலி 101 ரன்னும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கா இருக்கும் பலமான பேட்டிங் ஆர்டருக்கு 30 ஓவர்களிலேயே அந்த ஸ்கோரை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சு காரணமாக தென் ஆப்பிரிக்கா வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். முதல் ஓவரிலேயே முகமது சிராஜ், தொடக்க வீரர் குயீண்டன் டி காக் விக்கெட்டை கைப்பற்றினார்.
முதல் பவர்பிளே முடிவதற்குள்ளாகவே சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச வந்தார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே டெம்பா பவுமா கிளீன் போல்டானார். அடுத்து வந்த ஐடன் மார்க்ரம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஹென்ரிச் கிளாசென் விக்கெட்டை ஜடேஜா விக்கெட் கைப்பற்ற, ரஸ்ஸி வான் டெர் டூசென் விக்கெட்டை ஷமி கைப்பற்றினார்.
அதன் பிறகு அடுத்தடுத்து ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவ்வும் கடைசி விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை முடித்துக் கொடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மார்கோ யான்சென் 14 ரன்கள் எடுத்தார். இந்த உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து புதிய வரலாற்று சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய போட்டியில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.
இதன் மூலமாக இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் முதல் முறையாக ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேலும், அதிகபட்சமாக 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஒரு நாள் போட்டிகளில் 3 ஆவது முறையாக 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 69 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ஆனால், முதல் முறையாக உலகக் கோப்பையில் 100 ரன்களுக்குள் சுருண்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தென் ஆப்பிரிக்கா குறைந்தபட்சமாக 149 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஜஸ்ப்ரித் பும்ரா விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.