Australia vs England: பட்லர் தூக்க கலக்கத்தில் கேட்ச்சை கோட்டைவிட்டுட்டார் - ஆடம் கில்கிறிஸ்ட்

By karthikeyan VFirst Published Dec 17, 2021, 4:59 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட்டில் ஜோஸ் பட்லர் 2 கேட்ச்களை கோட்டைவிட்ட நிலையில், அவர் கவனமாக இல்லாமல் தூக்க கலக்கத்தில் இருந்ததால் தான் கேட்ச்சை கோட்டைவிட்டதாக ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட்  போட்டி அடிலெய்டில் நேற்று(டிசம்பர் 16) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆடாததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டேவிட் வார்னரும், லபுஷேனும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 172 ரன்களை குவித்தனர். சிறப்பாக பேட்டிங் ஆடி சதத்தை நெருங்கிய வார்னர் 95 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

அதன்பின்னர் லபுஷேனும் ஸ்மித்தும் இணைந்து நன்றாக ஆடினர். லபுஷேன் 21 ரன் மற்றும் 95 ரன்னில் இருந்தபோது கொடுத்த 2 கேட்ச் வாய்ப்பையும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் கோட்டைவிட, அந்த வாய்ப்பை பயன்படுத்தி சதமடித்த லபுஷேன் 2ம் நாள் ஆட்டமான இன்று 103 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கிய ஸ்டீவ் ஸ்மித் 93 ரன்னில் ஆட்டமிழந்து வார்னரை போலவே, ஸ்மித்தும் சதத்தை தவறவிட்டார்.

டிராவிஸ் ஹெட் (18), கேமரூன் க்ரீன் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அலெக்ஸ் கேரி (51), மிட்செல் ஸ்டார்க் (39) மற்றும் மைக்கேல் நெசெர் (35) ஆகிய மூவரும் நன்றாக ஆட, 473 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் மார்கஸ் ஹாரிஸின் கடினமான கேட்ச்சை அபாரமாக பிடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், அதன்பின்னர் மார்னஸ் லபுஷேனுக்கு 2 கேட்ச்களை கோட்டைவிட்டார். இன்னிங்ஸின் 35வது ஓவரில் லபுஷேன் 21 ரன்னில் இருந்தபோது கொடுத்த சற்று சவாலான கேட்ச் வாய்ப்பை தவறவிட்ட ஜோஸ் பட்லர், லபுஷேன் 95 ரன்னில் களத்தில் இருந்தபோது கொடுத்த எளிதான கேட்ச்சையும் கோட்டைவிட்டார் பட்லர். இதில் 2வதாக தவறவிட்ட கேட்ச் மிக மிக எளிதானது.

இந்நிலையில், பட்லர் கேட்ச் தவறவிட்டது குறித்து பேசிய ஆல்டைம் பெஸ்ட் விக்கெட் கீப்பர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட், மார்கஸ் ஹாரிஸின் கடினமான கேட்ச்சை பிடித்த பட்லர், அடுத்து  2 கேட்ச்களை தவறவிட்டார். அவரது விக்கெட் கீப்பிங் டெக்னிக்கை பற்றி ஆழமாக ஆராயவெல்லாம் நான் விரும்பவில்லை. ஆனால் இங்கிலாந்து விக்கெட் கீப்பர்களின் டெக்னிக் ஆஸ்திரேலியாவில் எடுபடாது. இங்கிலாந்து விக்கெட் கீப்பிங் சோம்பேறித்தனமான ஸ்டைல். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்களுடன் ஒப்பிடுகையில், அவர்கள் விக்கெட் கீப்பிங் டெக்னிக் மெதுவாக இருக்கும்.

டெக்னிக்கெல்லாம் இரண்டாவது பிரச்னை தான். கவனக்குறைவுதான் பட்லர் கேட்ச்சை தவறவிட்டதற்கு காரணம். முதல் நாள் ஆட்டம் முடிவடையும் தருவாயில், பார்வையாளர்கள் தூக்க கலக்கத்தில் இருந்தனர். அதேபோல் பட்லரும் தூக்க கலக்கத்தில் சோர்வாக இருந்ததால் தான் கேட்ச்சை தவறவிட்டார் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.
 

click me!