
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உலகக் கோப்பையின் 37ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா நலல் தொடக்கம் கொடுத்தார். அவர், 40 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரும் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரில் 49 சதங்கள் சாதனையை சமன் செய்தார். இறுதியாக இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.
பின்னர் வந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரனக்ளில் வெளியேறினர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நிற்க வேண்டிய நிலையில் அவர்களும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். குயீண்டன் டி காக் 5, டெம்பா பவுமா 11, ஐடன் மார்க்ரம் 9, ஹென்ரிச் கிளாசென் 1, ரஸ்ஸி வான் டெர் டுசென் 13, டேவிட் மில்லர் 11, கேசவ் மகாராஜ் 7, மார்கோ யான்சென் 14, ரபாடா 6, லுங்கி நிகிடி 0 என்று சொற்ப ரன்களில் வெளியேறினர். இதில் அதிகபட்சமாக மார்கோ யான்சென் மட்டுமே 14 ரன்கள் சேர்த்தார்.
கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணியானது 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்து அதிகபட்சமாக 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 12 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
இந்தப் போட்டியில் 121 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 101 ரன்கள் குவித்து சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால், உண்மையில், இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரவீந்திர ஜடேஜாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் நடிகை கஸ்தூரியும் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: கோலிக்கு உரிய மரியாதை மற்றும் அன்புடன், ஜடேஜா ஆட்டநாயகனாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியா 300 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக இருந்தார். சிறப்பான பந்து வீச்சின் காரணமாக விராட்டின் வெப்பத்தை மாற்றினார். 5 விக்கெட்டுகள் கைப்பற்றி போட்டியை மாற்றினார். மேலும், 2 கேட்சுகள் பிடித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.