#ZIMvsPAK அபித் அலி அபார இரட்டை சதம்.. மெகா ஸ்கோரை நோக்கி பாகிஸ்தான்..!

By karthikeyan VFirst Published May 8, 2021, 5:57 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அபித் அலி அபாரமாக ஆடி இரட்டை சதமடித்து, பாகிஸ்தான் அணியை மெகா ஸ்கோரை நோக்கி அழைத்து செல்கிறார்.
 

பாகிஸ்தான் அணி  ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற  பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் ஆடிவருகிறது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அபித் அலியும் இம்ரான் பட்டும் இறங்கினர். இம்ரான் பட் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அபித் அலியுடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார்.

அபித் அலி - அசார் அலி இணைந்து மிகச்சிறப்பாக ஆடி இருவருமே சதமடிக்க, 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 246 ரன்களை குவித்து கொடுத்தனர். அபாரமாக ஆடி சதமடித்த அசார் அலி 126 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் பாபர் அசாம் 2 ரன்னிலும், ஃபவாத் ஆலம் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி சதமடித்த தொடக்க வீரர் அபித் அலி, அபித் அலி 118 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

2ம் நாள் ஆட்டத்தை அபித் அலியும் சஜித் கானும் தொடர்ந்தனர். சஜித் கான் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் முகமது ரிஸ்வான் 21 ரன்னிலும் ஹசன் அலி ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். அதனால் 341 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில், தொடர்ந்து அபாரமாக ஆடிய அபித் அலி இரட்டை சதமடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து மிகச்சிறப்பாக ஆடிவரும் நௌமன் அலி சதத்தை நெருங்கிவிட்டார். 2ம் நாள் ஆட்டத்தின் டீ பிரேக் வரை பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 505 ரன்கள் அடித்துள்ளது. அபித் அலியும் நௌமன் அலியும் தொடர்ந்து சிறப்பாக ஆடிவருவதால் மெகா ஸ்கோரை நோக்கி பாகிஸ்தான் அணி நகர்ந்துவருகிறது.
 

click me!