இரட்டை சதம் விளாசிய தமிழ்நாட்டு வீரர்.. இன்னிங்ஸ் வெற்றி உறுதி

By karthikeyan VFirst Published Feb 6, 2020, 12:00 PM IST
Highlights

ரஞ்சி தொடரில் பரோடாவுக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் அபினவ் முகுந்த் இரட்டை சதம் விளாசி அசத்தினார். 
 

ரஞ்சி தொடரில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 4ம் தேதி தொடங்கி வடோதராவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பரோடா அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

தமிழ்நாடு அணியின் சார்பில் அபாரமாக பந்துவீசிய எம்.முகமது 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்பின்னர் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே அபாரமாக பேட்டிங் ஆடினர். முதல் விக்கெட்டுக்கு அபினவ் முகுந்த்தும் சூர்யபிரகாஷும் இணைந்து 172 ரன்களை சேர்த்தனர். 

அபாரமாக ஆடிய அபினவ் முகுந்த் சதமடிக்க, சூர்யபிரகாஷ் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கௌஷிக் காந்தி 19 ரன்களிலும் பாபா அபரஜித் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அபினவ் முகுந்த்துடன் இணைந்து சிறப்பாக ஆடிய சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் 49 ரன்கள் அடித்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரமிட்டு ஆடிய அபினவ் முகுந்த் இரட்டை சதமடித்து அசத்தினார். இரட்டை சதத்திற்கு அதிகமான பந்துகள் எல்லாம் அவர் எடுத்துக்கொள்ளவில்லை. சீரான வேகத்தில் ஸ்கோர் செய்ததால் 242 பந்தில் 206 ரன்களை விளாசிவிட்டார். 206 ரன்களில் அவர் ஆட்டமிழந்த பின்னர், எம்.முகமது அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். முகமது 56 பந்தில் 54 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 7 விக்கெட் இழப்பிற்கு 490 ரன்களை குவித்த நிலையில், தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

Also Read - அடுத்த போட்டியில் டீம்ல இருந்து அவரை தூக்கிட்டு இவரை சேர்த்தால் ஜெயிச்சுடலாம்.. முன்னாள் வீரர் அதிரடி

இதையடுத்து 214 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் பரோடா அணி, 62 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனவே தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 

click me!