உலக கோப்பையில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை! இனிமேலும் வீழ்த்தமுடியாது! முன்னாள் வீரர் ஒப்புதல்

By karthikeyan VFirst Published May 3, 2020, 6:16 PM IST
Highlights

உலக கோப்பையில் இதுவரை இந்தியாவை வீழ்த்திடாத பாகிஸ்தான் அணியால் இனிமேலும் வீழ்த்த முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே வேற லெவல் தான். ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மீது அதிகமாக இருக்கும். இரு அணி வீரர்களுமே வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் ஆடுவார்கள். 

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளாக பாகிஸ்தானுடன் ஆடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதுகின்றன. 1980களில் பாகிஸ்தான் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடியிருக்கலாம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா தான் பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி அதிகமான வெற்றிகளை குவித்துள்ளது. 

அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே கிடையாது. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ரெக்கார்டை இந்திய அணி பல்லாண்டுகளாக தொடர்ந்துவருகிறது. 1996,1999 உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தான் வென்றது. 2003ல் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தான் வென்றது. 2007 உலக கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. அந்த உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா ஆடவில்லை. 

2011 உலக கோப்பையில் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியது. 2015 உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் ஆடவில்லை. 2019 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா. 

எனவே இதுவரை உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் கூட தோற்றிராத இந்திய அணி அந்த ரெக்கார்டை பல்லாண்டுகளாக தொடர்ந்துவருகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வின்னிங் ரெக்கார்டை இந்தியா தக்கவைத்துக்கொள்ளும். ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் மோதுவது அரிதினும் அரிது. உலக கோப்பை தொடர்களில் பெரும்பாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் லீக் சுற்றில்தான் மோதிக்கொள்ளும். அதில் கண்டிப்பாக இந்தியா தான் வெல்லும். பாகிஸ்தான் வீரர்களால் உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இருக்கும் நெருக்கடியை கையாள முடிவதில்லை. அதனால் தான் தோற்க நேரிடுகிறது. உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை பாகிஸ்தான் வீரர்களுக்கு இருப்பதில்லை என்று அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
 

click me!