AB de Villiers retirement ஐபிஎல் உட்பட அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார் டிவில்லியர்ஸ்..!

By karthikeyan VFirst Published Nov 19, 2021, 2:18 PM IST
Highlights

ஐபிஎல் உட்பட அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார் ஏபி டிவில்லியர்ஸ்.
 

தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ், கடந்த 2018ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 2019ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை நடந்தநிலையில், அதில் ஆடாமல் அதற்கு ஓராண்டுக்கு முன் திடீரென டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

அதன்பின்னர் ஐபிஎல் உட்பட மற்ற டி20 லீக் தொடர்களில் மட்டுமே ஆடிவந்த டிவில்லியர்ஸ், கடந்த சில சீசன்களாக ஐபிஎல்லிலும் சரியாக ஆடுவதில்லை. அவரது பேட்டிங் அண்மைக்காலங்களில் ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஐபிஎல்லில் அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் அனைத்து அணிகளும், 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். ஆர்சிபி அணி இனியும் டிவில்லியர்ஸை தக்கவைக்குமா என்று சொல்லமுடியாது.

இந்நிலையில், ஐபிஎல் உட்பட அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் டிவில்லியர்ஸ்.

ஐபிஎல்லில் மொத்தமாக 184 போட்டிகளில் ஆடி 5162 ரன்களை குவித்து, ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறார் டிவில்லியர்ஸ். ஆர்சிபி அணிக்காக 156 போட்டிகளில் ஆடி 4491 ரன்களை குவித்துள்ளார் டிவில்லியர்ஸ்.

ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்காக ஆடினார் டிவில்லியர்ஸ். 2015 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அவர்   அடித்த 133* ரன்கள் தான் அவரது அதிகபட்ச ஸ்கோர்.

ஐபிஎல் தவிர பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிய டிவில்லியர்ஸ், பார்படோஸ் டிரைடண்ட்ஸ், பிரிஸ்பேன் ஹீட், லாகூர் காலண்டர்ஸ், மிடில்செக்ஸ், ராங்பூர் ரைடர்ஸ், சௌத் ஆஃப்ரிகன்ஸ், டைடன்ஸ் & ஷ்வேன் ஸ்பார்டன்ஸ் ஆகிய பல அணிகளுக்காக ஆடியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக 340 போட்டிகளில் ஆடி 9424 ரன்களை குவித்துள்ளார் டிவில்லியர்ஸ். முதல் தர கிரிக்கெட்டில் 141 போட்டிகளில் ஆடி 10689 ரன்களையும், 263 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடி 11123 ரன்களையும் குவித்துள்ளார் டிவில்லியர்ஸ்.
 

click me!