போதுமான வாய்ப்பே கொடுக்காமல் அந்த வீரரை அணியிலிருந்து ஓரங்கட்டுவது சரியல்ல.! இந்திய அணி தேர்வு மீதான விமர்சனம்

By karthikeyan VFirst Published May 8, 2021, 6:34 PM IST
Highlights

போதுமான வாய்ப்பே கொடுக்காமல் குல்தீப் யாதவை டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டியது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியில் கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை வெற்றி அதிவேகமாக வளர்ந்து, வளர்ந்த அதேவேகத்தில் வீழ்ந்த ஒரு வீரர் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்(சைனாமேன்) குல்தீப் யாதவ்.

அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடியின் இடத்தை பிடித்த குல்தீப் - சாஹல் ஜோடியால், அஷ்வின் - ஜடேஜா அளவிற்கு நீடித்து நிலைக்க முடியவில்லை. 2017-2018ம் ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து, இந்திய அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்த குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி, 2019லிருந்து வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது.

3 விதமான போட்டிகளிலும் அபாரமாக பந்துவீசி வந்த குல்தீப் யாதவ், 2019 ஐபிஎல்லில் மரண அடி வாங்கினார். இதையடுத்து கேகேஆர் அணியின் ஆடும் லெவனிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அவருக்கு, 2020 ஐபிஎல்லிலும் பெரிதாக வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இந்த சீசனில் குல்தீப்பை கேகேஆர் அணி கழட்டிவிட, ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்காமல் பென்ச்சில் உட்கார வைத்தது.

3 விதமான சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியிலும் ஆடிவந்த குல்தீப், இப்போது எந்தவிதமான போட்டியிலும் ஆடுவதில்லை. 3 அணிகளிலும் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறிவருகிறார். வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கான முதன்மை ஸ்பின்னராக இருந்த குல்தீப் யாதவ், இப்போது அந்த வாய்ப்பையும் இழந்துவிட்டார்.

இங்கிலந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடிய குல்தீப் யாதவுக்கு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 4 பேட்டிங் ஆடத்தெரிந்த ஸ்பின்னர்கள் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், குல்தீப்புக்கு இடம் கிடைக்கவில்லை. அஷ்வின், அக்ஸர் ஆகிய இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட்டுகளை வீழ்த்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். அஷ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் சீனியர் ஸ்பின்னர்கள். அக்ஸர், சுந்தர் ஆகிய இருவரும் இளம் வீரர்கள்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் குல்தீப்பிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

குல்தீப் யாதவின் புறக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, குல்தீப் யாதவின் புறக்கணிப்பு கொஞ்சம் கடினமானது. குல்தீப் அதிகமான போட்டிகளில் ஆடாதபோதிலும், அவர் அணியில் புறக்கணிக்கப்பட்டது கடினமான முடிவுதான். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான அணியில் புறக்கணிக்கப்பட்டதை மட்டும் குறிப்பிடவில்லை. கொரோனா நேரத்தில் அதிகமான வீரர்களை அணியில் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பிருப்பதால் குல்தீப்பை எடுத்திருக்கலாம். அஷ்வின், அக்ஸர், ஜடேஜா, சுந்தர் ஆகிய நால்வருமே விரல் ஸ்பின்னர்கள். எனவே ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப்பை வெரைட்டிக்காக எடுத்திருக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!