2023 ஆசிய கோப்பையில் இந்திய அணி கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு சென்று கலந்துகொள்ளாது. அதனால் பொதுவான இடத்தில் தான் ஆசிய கோப்பை நடக்கும். அதேவேளையில், 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை பாகிஸ்தான் கூறியது போல புறக்கணிக்க முடியாது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 2012ம் ஆண்டுக்கு பின் இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருகின்றன. இந்திய அணி கடைசியாக 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றதுதான். அதன்பின்னர் 15-16 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட செல்லவில்லை.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த வேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விருப்பம் தெரிவித்துவந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.
undefined
இதையும் படிங்க - ரிஷப் பண்ட்டின் தலையெழுத்து ஹர்திக் பாண்டியாவின் கையில்..! பெரும் குழப்பத்துக்கு கவாஸ்கர் சொல்லும் தீர்வு
அடுத்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதில் இந்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இந்நிலையில், இதுகுறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 2023 ஆசிய கோப்பை பொதுவான ஒரு இடத்தில் நடத்தப்படும் என்று ஜெய் ஷா கூறினார்.
ஜெய் ஷாவின் கருத்தால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட மறுத்தால் 2023ல் இந்தியாவில் நடத்தப்படும் ஒருநாள் உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று தெரிவித்தது.
இதுகுறித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அறிக்கையில், ஆசிய கோப்பை பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்ற ஜெய் ஷாவின் கருத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்திருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமோ, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்களிடமோ கலந்தாலோசிக்காமல் ஜெய் ஷா கருத்து கூறியது சரியல்ல.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்துவது என்று முடிவு செய்தபோது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர் நாட்டு வாரியங்கள் அனைத்தும் ஒருமித்த கருத்துடன் ஆதரவளித்தன. அப்படியிருக்கையில், இப்போது ஜெய் ஷா கூறிய கருத்து தனிப்பட்ட முறையில் அவர்களாக கூறும் கருத்து. ஜெய் ஷாவின் கருத்து, 1983ம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அமைக்கப்பட்டபோது எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ, அதற்கு எதிரான கருத்து.
பிசிசிஐயின் இந்த கருத்து பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் ஆட பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வராது. 2024-2031 காலக்கட்டத்தில் இந்தியாவில் நடக்கும் எந்த ஐசிசி தொடரிலும் பாகிஸ்தான் பங்கேற்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-யை எச்சரிக்கும் வகையில் அறிக்கை விடுத்தது.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்திய அணி கலந்துகொள்ளவில்லை என்றால் ஆசிய கோப்பை தொடரே நடக்காது. உலக கோப்பையுடன் ஒப்பிடும்போது ஆசிய கோப்பை சிறிய தொடர். 2023 ஆசிய கோப்பை கண்டிப்பாக பொதுவான இடத்தில் தான் நடக்கும். ஆனால் பாகிஸ்தான் கூறுவதை போல அந்த அணியால் ஒருநாள் உலக கோப்பையை புறக்கணிக்க முடியாது. உலக கோப்பையில் ஆடும் அணிகளுக்கு ஐசிசி பெரும் தொகையை கொடுக்கும். அதை பாகிஸ்தானால் இழக்க முடியாது.
இதையும் படிங்க - பந்து தலையில் பட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அதிரடி வீரர்..! பாகிஸ்தான் அணிக்கு மரண அடி
எனவே நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதை சீரியஸாக எடுக்கவில்லை. இந்திய அணி பாகிஸ்தானுக்கு கண்டிப்பாக செல்லாது. இதை நான் எழுதிக்கூட தருகிறேன். அதேபோல மற்றொன்றையும் எழுதி தருகிறேன்.. பாகிஸ்தான் கண்டிப்பாக இந்தியாவிற்கு வந்து ஒருநாள் உலக கோப்பையில் ஆடும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார் ஆகாஷ் சோப்ரா.