
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. வரும் 26ம் தேதி முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் முதன்மை தொடக்க வீரர்களுடன், மயன்க் அகர்வாலும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அறிமுகமாகி, அதன்பின்னர் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்ட மயன்க் அகர்வால், ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறக்கப்பட்ட பின்னர் இந்திய அணியில் இடத்தை இழந்தார். 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பின்னர் இந்திய அணியில் மயன்க் ஆடவில்லை. இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயன்க் ஆடவில்லை.
ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய இருவருமே ஆடாததால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட வாய்ப்பு பெற்ற மயன்க் அகர்வால், அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமும் (150), 2வது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்தார். இக்கட்டான சூழல்களில் அவர் ஆடிய விதம், மீண்டும் இந்திய அணியில் இடம்பெற உதவியது. அதன்விளைவாக, தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார் மயன்க் அகர்வால்.
மயன்க் அகர்வால் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தாலும், ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய இருவர் தான் முதன்மை தொடக்க வீரர்கள் என்பதால் மயன்க் அகர்வாலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.
இந்நிலையில், மயன்க் அகர்வாலை கண்டிப்பாக ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ள ஆகாஷ் சோப்ரா, அதற்கான வழியையும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, மயன்க் அகர்வால் ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆடும் வீரர். ஸ்பின்னிற்கு எதிரான அவரது டெக்னிக் அபாரம். ஃபுல் லெந்த்தில் வந்தால் நன்றாக முன்சென்று ஆடுகிறார். ஷார்ட் பிட்ச் பந்துகளாக இருந்தால், பேக் ஃபூட்டில் வந்து ஆடுகிறார். இறங்கிவந்து அடித்தும் ஆடுகிறார். ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடும் மயன்க் அகர்வாலை, மிடில் ஆர்டர் வீரராக ஆடவைக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்.