
ஐபிஎல்லில் சாம்பியன் கிரிக்கெட்டர்களில் கைரன் பொல்லார்டும் ஒருவர். 2010ம் ஆண்டிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவரும் கைரன் பொல்லார்டு, ஐபிஎல்லில் 189 போட்டிகளில் ஆடி 3412 ரன்களை குவித்ததுடன், 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்த 5 சீசன்கள் உட்பட 13 சீசன்களில் மும்பை அணிக்காக பொல்லார்டு அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளார்.
ஆனால் தனது கிரிக்கெட் கெரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் பொல்லார்டு, இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. அதன்விளைவாக இந்த சீசனின் பாதியிலேயே ஆடும் லெவன் காம்பினேஷனில் இடத்தை இழந்தார். ஆல்ரவுண்டர் இல்லாததால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமான தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து தொடரை விட்டு வெளியேறியது.
இந்நிலையில், இதுதான் பொல்லார்டின் கடைசி சீசனாக இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட பொல்லார்டு, டி20 லீக் தொடர்களில் மட்டும் ஆடிவருகிறார். அந்தவகையில் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடுகிறார். ஆனால் அவரது ஐபிஎல் கெரியர் இந்த சீசனுடன் முடிந்துவிட்டது. இனிமேல் ஆட வாய்ப்பில்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, பொல்லார்டை நாம் ஐபிஎல்லில் பார்த்தது இதுவே கடைசியாக இருக்கும். அடுத்த சீசனில் அவர் ஆட வாய்ப்பில்லை. அவரை கழட்டிவிட்டால் மும்பைக்கு ரூ.6 கோடி கிடைக்கும். அந்த தொகையில் வேறு வீரரை ஒப்பந்தம் செய்ய முடியும் என்று கருத்து கூறியுள்ளார்.