#MIvsCSK மும்பை அணி அவரை கண்டிப்பா ஆடவைத்தே தீரணும்..! க்ருணல் பாண்டியாவை தூக்குங்க

By karthikeyan VFirst Published May 1, 2021, 3:39 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனைத்தான் 4ம் வரிசையில் இறக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வழக்கம்போலவே இந்த சீசனிலும் 5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக ஆடிவருகிறது. முதல் 5 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்த நிலையில், கடந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் கம்பேக் கொடுத்தது மும்பை அணி.

பொதுவாக தங்கள் அணி வீரர்கள் சரியாக ஆடாவிட்டாலும், அவ்வளவு எளிதாக அணியிலிருந்து ஓரங்கட்டாத மும்பை அணி, இந்த சீசனில் முதல் 5 போட்டிகளில் சரியாக ஆடாமல் வெறும் 73 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பிய இஷான் கிஷனை கடந்த போட்டியில் நீக்கியது மும்பை அணி. 

இஷான் கிஷன் நீக்கப்பட்டதையடுத்து, க்ருணல் பாண்டியா கடந்த போட்டியில் 4ம் வரிசையில் இறக்கப்பட்டார். அந்த போட்டியில் இலக்கு எளிதானது என்பதாலும், மறுமுனையில் டி காக் களத்தில் நின்றதாலும், க்ருணல் பாண்டியா நெருக்கடியில்லாமல் அடித்து ஆடி, 26 பந்தில் 39 ரன்கள் அடித்தார்.

ஆனால் க்ருணல் பாண்டியா 4ம் வரிசைக்கு சரியாக வரமாட்டார் என்றும் சிஎஸ்கேவிற்கு எதிரான இன்றைய போட்டியில் க்ருணலை நீக்கிவிட்டு இஷான் கிஷனை சேர்க்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, மும்பை அணியில் போதுமான பவுலர்கள் உள்ளனர். சிஎஸ்கே அணியில் மொயின் அலி, ரெய்னா, ஜடேஜா, சாம் கரன் என நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், இடது கை ஸ்பின்னரான க்ருணல் ஒன்றிரண்டு ஓவர்களே வீசுவார். எனவே அவர் அணியில் தேவையில்லை. ஜெயந்த் யாதவ் இருக்கிறார். எனவே க்ருணலை நீக்கிவிட்டு இஷான் கிஷனை சேர்க்க வேண்டும்.

இஷான் கிஷன் சென்னையில் என்னை பொறுத்தவரை எந்த பெரிய தவறும் செய்யவில்லை. 4ம் வரிசையில் அவர்தான் ஆட வேண்டும். எனவே சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் மும்பை அணி இஷான் கிஷனை எடுத்து 4ம் வரிசையில் இறக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!