
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் இன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள தேவலாயங்கள் மற்றும் திருத்தலங்களில் நேற்று இரவு முதல் கூட்டு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் மின்னொலியில் ஜொலித்த நிலையில் ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் பெரும்பாலான தேவாலயங்களில் குடில் அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் டீம் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை 26ஆம் தேதி மெல்போர்னில் தொடங்கிறது. இதற்கிடையில், உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், ஆஸ்திரேலியா வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் வீரர்கள் கிறிஸ்துமஸ் பரிசு கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் ஷான் மசூத், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினருக்கு துணை ஊழியர்களுடன் பரிசுகளை வழங்குவதைக் காணக்கூடிய காட்சி இடம் பெற்றுள்ளது. ஒரு கிரிக்கெட் அணியாக பாகிஸ்தான் எவ்வளவு அருமையாக இருக்கிறது என்பதைக் காட்டும் வீடியோ உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது. இந்த வீடியோவில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் சில ஆஸி கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினரும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.