
Sivalokanatha Swamy Temple Consecration : ஆன்மிக ஸ்தலங்களுக்கு பெயர் பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அடுத்த திருப்புங்கூரில் அமைந்துள்ளது தான் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயில். இந்த கோயிலில் தான் சிவபெருமான் தனது பக்தனுக்காக நந்தி பகவானை விலகி இருக்கும்படி செய்தார். அப்படி ஒரு அற்புதம் நிகழ்ந்த ஸ்தலம் தான் இந்த கோயில். சிவபெருமான் மீது தீவிர பற்று கொண்டவர் நந்தனார். எப்போதும் இறை சிந்தனையில் இருந்து சிவபெருமானை காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
தீராத குடும்ப கஷ்டங்கள் தீர வேண்டுமா? காஞ்சி காமாட்சி அம்மன் அருளும் எளிய பரிகாரங்கள்!
அப்படி ஒரு நாள் அவருக்கு சிவனை காண வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரால் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. கோயிலுக்கு வெளியில் நின்றவாறே சிவபெருமானை தரிசனம் செய்ய முயன்றார். ஆனால், குறுக்கே நந்தி பகவான் இருந்த நிலையில் அவரால் சிவபெருமானை தரிசனம் செய்ய முடியவில்லை. நந்தனாருக்காக அஷ்டதிக் பாலகர்களும் சிவபெருமானிடம் முறையிடவே, சிவபெருமானும் தனது பக்தனுக்காக மனமுருகி நந்தி பகவானே, தன்னை காண தனது பக்தன் வந்திருப்பதாக கூறி சற்று விலகியிருக்கும்படி கூறியிருக்கிறார். நந்தி பகவானும் அவ்வாறு செய்யவே நந்தனார், மனதார சிவபெருமானை தரிசனம் செய்துள்ளார்.
அப்படி ஒரு அற்புதம் நிகழ்ந்த இந்த கோயிலில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் மிக பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்துள்ளது. கடந்த 23 ஆம் ஆண்டு கணாபதி பூஜை, கோ பூஜை, அனுக்ஞை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கிய யாக பூஜைகள் கடைசியாக 6 கால யாக பூஜையுடன் நிறைவுற்று பூர்ணாகுதி நடைபெற்றது.
ஈசன் இன்றி அமையாத உலகு! சிவனை அடைய காமாட்சி அம்மன் பட்ட கஷ்டங்கள் தெரியுமா?
இதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடம் என்று சொல்லப்படும் புனித நீரடங்கிய கலசம் புறப்பாடு நடைபெற்று கோயிலை வலம் வந்து கடைசியாக கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதன் பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பரிவார தெய்வங்களுக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.