
சென்னை மாங்காட்டில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது பார்வதி தேவி சிவனை மணம் முடிக்க நெருப்பில் தவம் செய்த ஆதி காமாட்சி தலமாகும். காஞ்சி காமாட்சிக்கு முந்தியதாக மாங்காட்டில் தான் காமாட்சி அம்மன் அருள்பாளித்தார்.
கோவிலின் வரலாறு:
இந்த உலகம் செயல்படுவது அந்த ஈசனின் பார்வையினால் தான். அப்படி இருக்கும்போது அந்த எம்பெருமானின் கண்களை ஒருமுறை விளையாட்டாக பார்வதிதேவி மூடி விட்டாள். எம்பெருமானின் இருகண்களும் மூடப்பட்ட ஒரு நொடி என்பது, நமக்கு ஒரு யுகம் ஆகும். பூலோகம் இருண்டது. சூரியன் சந்திரன் ஒளிரவில்லை. தேவியின் விளையாட்டு வினையாகி விட்டது. கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் சிவபெருமான். இதனால் தேவியை, பூலோகத்தில் மனித பிறவி எடுத்து, தவம் புரிந்து பின்பு தன்னை வந்து சேரவேண்டும் என்ற சாபத்தை கொடுத்துவிட்டார் சிவபெருமான். பூலோகத்தில் மனித பிறவி எடுத்த தேவி, மாமரங்கள் நிறைந்த இந்த மாங்காட்டினை தேர்ந்தெடுத்து, நெருப்பின் மத்தியில் கடும் தவம் புரிந்து, காஞ்சிபுரத்தில் காமாட்சியாக அந்த ஏகாம்பரேஸ்வரரை மணந்தார்.
மாஞ்சோலைகள் நிறைந்த இந்த இடம் மாங்காடு என்றும், அம்மன் தவம் இருந்ததால் மாங்காடு காமாட்சி அம்மன் என்றும் இக்கோவிலுக்கு பெயர் வந்தது.ஆனால் தேவி ஈசனை மணந்த பிறகும் இந்த இடத்தில் இருந்த வெப்பமானது சிறிதும் தணியவில்லை. வறட்சியோடு தான் காணப்பட்டது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, இந்தப் பகுதியை செழிப்பு மிக்க பகுதியாக மாற்றினார். ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்த பின்புதான் அந்த அம்மனின் கோபம் தணிந்தது. இதனால்தான் இந்த இடத்தில் ஸ்ரீ சக்கரத்தை மூலஸ்தானத்தில் அம்பாளின் ரூபமாக வழிபட்டு வருகிறார்கள்.