குமரியில் நடக்கும் சிவாலய ஓட்டம் மகாசிவராத்திரி அன்று ஓடி ஓடியே 12 சிவாலயங்களை தரிசிக்கும் வழிபாட்டின் பின்னணி

By Ma Riya  |  First Published Feb 16, 2023, 11:45 AM IST

 Sivalaya Ottam: கன்னியாகுமரியில் மட்டுமே நடக்கும் சிவாலய ஓட்டம் என்ற வழிபாட்டின் வரலாறும், பின்னணியும்.. 


மகாசிவராத்திரி அன்று நாடு முழுவதும் சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். கன்னியாகுமரியிலும் பன்னிரு சிவாலயங்களில் விசேஷ பூஜை நடைபெறும். அதில் பாரம்பரியமான சிவாலய ஓட்டம் பெயர் பெற்றது. இதில் பக்தர்கள் இரவு முழுக்க ஒவ்வொரு சிவாலயமாக ஓடியோடி வழிபடுவார்கள். இந்த ஓட்டத்தில் பல சிறப்புகள் உள்ளன. முதலாவதாக இந்த ஓட்டம் கன்னியாகுமரியில் மட்டும்தான் உள்ளது. 

சிவாலய ஓட்டம் 

Latest Videos

undefined

மகாசிவராத்திரி தினத்தில் நாடு முழுக்க இருக்கும் சிவன் கோயில்களில் 'சிவாயநம' என்ற மந்திரம் தான் கேட்கும். ஆனால் குமரிக்கு நீங்கள் அன்றைய தினம் சென்றால், 12 சிவன் கோயில்களில் மட்டும் கோவிந்தா! கோபாலா! என்ற ஸ்ரீநாராயணனின் திருநாமம் தான் எங்கும் ஒலிக்கும். இந்த முரணான வழிபாடு ஏன் என்றால், சிவனும், நாராயணனும் வெவ்வேறானவர்கள் இல்லை என்பதை நிலைநாட்ட எனக் கூறப்படுகிறது. இதற்கென புராண கதையும் கூட உள்ளது. 

கன்னியாகுமரியில் உள்ள திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்கோடு, திருநந்திக்கரை, கல்குளம், திருமலை, பொன்மனை, பன்றிப்பாகம், திருவிடைக்கோடு,  திருப்பன்றிக்கோடு, மேலாங்கோடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவ ஆலயங்களில் தான் இந்த சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. சிவராத்திரிக்கு முந்தைய தினத்தில் இருந்து ஓடியோடி இந்த தரிசனத்தை பக்தர்கள் செய்கிறார்கள். 

உள்ளூர் விடுமுறை 

இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் காவி ஆடையுடன், கையில் ஒரு பனை விசிறியும், இன்னொரு கையில் சின்ன பண முடிப்பும் வைத்து கொள்வார்கள். இவற்றோடுதான் அவர்கள் சிவனை ஓடியோடி தரிசனம் செய்கின்றனர். இப்படி ஓடும் பக்தர்கள் கோயில் குளத்தில் குளித்ததும், சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். கையில் இருக்கும் விசிறியால் சுவாமிக்கு விசிறிவிட வேண்டும் என்பதும் ஐதீகம். இந்தாண்டில் சிவாலய ஓட்டம் நாளை தொடங்கும். இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை கூட விடப்பட்டுள்ளது. 

புராண வரலாறு  

சிவாலய ஓட்டத்தின் புராண வரலாற்றை தெரிந்தால் ஆச்சயப்படுவீர்கள். புருஷாமிருகம் என்பது இடுப்புக்கு மேல் மனிதனும், கீழ் புலியுமாக தோற்றம் கொண்டது. இந்த உருவத்தை புலிக்கால் முனிவர் வியாக்ரபாதரே சிவனிடம் தவமிருந்து எடுத்தார் எனக் கூறப்படுகிறது. புருஷாமிருகத்திற்கு விஷ்ணு என்றால் சுத்தமாக ஒத்துவராது. அதனாலே அவர் நாமத்தை எவராது தன் செவியில் விழ தன் எல்லைக்குள் உச்சரித்தால் அவரை புருஷாமிருகம் தாக்குமாம். 

ஆனால் தவத்தைவிடவும் புஜ வலிமைதான் பலம் என பீமன் நம்பிக்கொண்டிருந்தார். இருவருக்கும் அரி, சிவன் ஆகியோர் ஒன்று என பாடம் புகட்ட நினைத்தார் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் தர்மர் நடத்திய யாகத்திற்கு புருஷாமிருகத்தின் பாலை எடுத்து வர பீமனுக்கு உத்தரவிட்டார் கிருஷ்ணர். பீமன் தயங்கினார். அவரை தைரியப்படுத்த பன்னிரெண்டு ருத்திராட்சக் கொட்டைகள் கொடுத்து, புருஷாமிருகம் தாக்க வந்தால் பயன்படுத்திக் கொள்ள பீமனிடம் சொன்னார் கிருஷ்ணர். 

தாக்க வரும்போது கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடவேண்டும் என்பதுதான் கிருஷ்ணரின் வாக்கு. அப்படிபோட்டால் அது சிவலிங்கமாக மாறிவிடுமாம். அதை கண்டால் புருஷாமிருகம் வணங்கும், அப்போது பீமன் தப்பிக்கலாம் என்பதுதான் கிருஷ்ணர் பீமனுக்கு சொன்னது. இதைக் கேட்ட பீமன் திருமலைக்கு சென்று தவத்தில் இருந்த புருஷாமிருகத்தை அழைத்தார். தவம் கலைந்த புருஷாமிருகம் கோபம் கொண்டு தாக்க வந்தது. பீமன் ருத்திராட்சத்தை போட்டார். புருஷாமிருகம் வணங்கியது. 

இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: அய்யன் சிவனின் அருளைப் பெற வாழ்வில் ஒருமுறையாவது இந்த விரதம் இருக்கணும்.. ஏன் தெரியுமா?

பீமன் கோவிந்தா, கோபாலா என அழைக்க புருஷா மிருகம் தவம் கலைய, மீண்டும் பீமன் ருத்திராட்சத்தை போட புருஷா மிருகம் சிவனை வணங்க.. என பதினோரு இடங்களில் ருத்திராட்ச கொட்டை போடப்பட்டது. அதில் 12ஆவது இடம் தான் திருநட்டாலம். இங்கு  ருத்திராட்ச கொட்டை போடும்போது பீமன் மாட்டிக் கொண்டார். அப்போது பீமனுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லையிலும், மற்றொரு கால் வெளியேவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

அப்போது தர்மரிடம் நியாயம் கேட்கப்பட்டது. தன்னுடைய சகோதரர் சிக்கலில் இருப்பதை அறிந்தும் புருஷாமிருகத்தின் எல்லையில் இருக்கும் பாதி உடல் அதற்குதான் சொந்தம் என்றார் தர்மர். சிக்கலான தருணத்தில் அங்கு தோன்றிய கிருஷ்ணர் அரியும், சிவனும் ஒன்றுதான் என உணர்த்தி பிரச்சனையை சுமுகமாக முடித்தார். அதன் பிறகு யாகத்திற்கு புருஷாமிருகம் உதவியது. இதைக் குறிக்கும் வகையில் 12 சிவன் கோயில்களை வணங்க சிவாலய ஓட்டம் நடக்கிறது.

எப்போது விரதம்?  

சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மகா சிவராத்திரிக்கு முன்னர் வரும் தேய்பிறை ஏகாதசிக்கும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே விரதத்தை தொடங்குவர். விரத தினங்களில் காலை தொடங்கி மாலை வரை இளநீர், நுங்கும், இரவில் துளசி இலை, துளசி தீர்த்தமும் எடுத்துக் கொள்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் சபரிமலைக்கு செல்பவர்களுக்கு இருப்பது போல குருசாமி வழிகாட்டுவார். சிவபக்தர்கள் கோவிந்தா! கோபாலா! என்ற நாமத்தை சொல்லிக் கொண்டே ஓடுகின்றனர். 

இதையும் படிங்க: சிவன் வசிக்கும் கைலாய மலையில்..பக்தர்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகளுக்கே விளங்காத மர்ம சக்தி.. அது என்ன?

click me!