பாவத்தை போக்கும் பம்பா நதி – சபரிமலை தரிசனம்

First Published Dec 20, 2016, 9:50 AM IST
Highlights


எருமேலியில் இருந்து பெரும் பாதை வழியாக நடந்துவரும் பக்தர்களும் கோட்டயம், செங்கனூர், எர்ணாகுளம், திருவல்லா, ஆலப்புழா, புனலூர், சாலக்காயம் வழியாக வரும் பக்தர்களும் பம்பா நதிக்கரையில் ஒன்று கூடுகின்றனர். இங்கு நீராடிய பின்னர், பக்தர்கள் 7கி.மீ. தூரம் உள்ள சபரிமலை நோக்கி பயணத்தை தொடர்கின்றனர்.

ராமாயணதில், சீதையை ராவணன் கவர்ந்து சென்ற பின்னர், ஸ்ரீராமனும், லட்சுமணனும் காடுகளில் சீதையைத் தேடி அலைந்து துக்கப்பட்டனர். அப்போது மதங்க முனிவரின் ஆசிரமம் கண்களில் தென்பட அங்கே சென்றபோது, முனிவர் தீர்த்த யாத்திரை சென்றிருந்தார்.

ஆசிரமத்தில் உள்ள குடிலில் நீலி என்ற பெண் மட்டும் இருந்தாள். அவள் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ராம, லட்சுமணர்களை வரவேற்றாள். முனிவருக்கு பணிவிடை செய்து வரும் அவள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்ற குற்ற உணர்வுடன் அவர்களுக்கு உணவளிக்கத் தயங்கினார்.

இதை புரிந்து கொண்ட ராமபிரான், மனிதர்கள் அனைவரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இதில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பாகுபாடு ஒன்றுமில்லை. நீ கவலைப்படாமல் எங்களுக்கு உணவளிப்பாயாக என அன்புடன் கூறி, அவர் பரிமாறிய உணவை சாப்பிட்டார்.

மேலும் உன்னைத் தாழ்ந்த குலத்தவள் என்று கருதும் மக்கள் உன்னை போற்றிப் புகழும் நிலையை நான் உனக்கு அளிக்கிறேன்! என்று திருவாய்மலர்ந்தருளி, அவளது பூரண சம்மதத்துடன் அப்பெண்ணை அழகான அருவியாக மாற்றி புனிதமாக்கினார். அப்பெண் நீலிதான் இன்று பம்பா நதி எனப் போற்றப்படுகிறது.

கங்கையை போன்ற புண்ணிய நதி பம்பா, தட்சிண கங்கையான இங்கு ராம, லட்சுமணரும் மனம் குளிர நதியில் நீராடி தனது தந்தை தசரதனுக்கு "பிதுர் தர்ப்பணம்' செய்ததாக கூறுவர்.

இதனடிப்படையில் ஒரு சில பக்தர்கள் இந்த நதியின் முதல் பாலம் அருகே உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடி, பிதுர் தர்ப்பணம் செய்கின்றனர். மற்ற பக்தர்கள் எல்லாம் இங்கு நீராடி நீண்டதூரம் நடந்து வந்த களைப்பைப் போக்கிக் கொள்கின்றனர்.

தர்ம சாஸ்தா இந்த மண்ணுலகில் மணிகண்டனாக அவதரித்த இடம் இதுதான். இந்த இடத்துக்கு பம்பா சக்தி என்று இன்னொரு பெயரும் உண்டு. மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்ச மலைப் பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு ஆலப்புழா, பந்தனம்திட்டா மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடி, வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது.

குறிப்பாக இங்குள்ள ஆஞ்சநேயர், சபரிமலை ஐயப்பனை நோக்கியே எழுந்தருளி இருக்கிறார். ராம அவதாரத்தில், பிற்காலத்தில் தாம் இங்கு வரப்போவதாகும், அப்போது தன்னைக் காண வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆஞ்சநேயருக்கு ராமர் அறிவுறுத்தியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள கணபதி மற்றும் ராமர் கோயில்களில் வழிபட்டு, பக்தர்கள் நீலிமலை ஏறுகின்றனர்.

பம்பை நதிக்கரையில் மகர விளக்கு பூஜைக்கு முன்னர் விளக்கு உற்சவம் நடைபெறுகிறது. இதற்கு பம்பா உற்சவம் என்று பெயர். பெரிய இலைகளைக் கொண்டு தோணி போல செய்து அதில் நெய் தீபமேற்றி நதியில் மிதக்க விடுவார்கள். மேலும் இந்த பம்பை நதிக்கரையில் விதவிதமான உணவு சமைத்து மானசீகமாக ஐயப்பனுக்கு படைத்து பிரசாதமாக உண்பார்கள்.

இந்த உற்சவகால விருந்தில் சுவாமி ஐயப்பனும் பங்கேற்பதாக ஐதீகம். மேலும், புராண காலங்களில் ரிஷிகள் பலரும் பம்பை நதிக்கரையோரம் தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆதலால் இவ்விடம் யோகிகள் வாழ்ந்த யோக பூமியாகும். இந்த பம்பை நதி புனிதம் பெற தெய்வ நதிகளான கல்லாறு, கக்கட்டாறு ஆகிய நதிகள் சங்கமமாகின்றனர். எனவே, திரிவேணி சங்கமத்துக்கு இணையாக பம்பை நதி வணங்கப்படுகிறது.

click me!