புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடூரமாகக் கொலை செய்த கொடூரர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சியையும், பெரும்வேதனையையும் தருகிறது. பெற்ற மகளை இழந்து ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் சிறுமியின் பெற்றோரை என்ன வார்த்தைகள் சொல்லித் தேற்றுவதென்று தெரியவில்லை. குழந்தையை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக் குறித்துப் பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. அறத்தையும், ஒழுக்கத்தையும் போதித்த மேன்மை மிகுந்த தமிழ்ச்சமூகத்தில் பச்சிளம் பிள்ளைகளுக்கு எதிராக நடந்தேறும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களும், கொலைகளும் தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது.
கரூரில் ஆட்சியருக்காக நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மழலைகள்
பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாலேயே ஆட்படுத்தப்படுகிறார்கள் என்பதன் மூலம் இச்சமூகம் அறவுணர்ச்சி துளியுமற்ற குற்றச்சமூகத்தின் பெருத்த உருவமாக மாறியிருக்கிறது என்பது ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய வேதனையாகும். ஆதியிலே பெண்களைத் தலைமையாக ஏற்று வந்த தமிழ்ச்சமூகம் இன்றைக்கு எந்தளவுக்குப் பாழடைந்திருக்கிறது என்பதற்கு இக்கோர நிகழ்வே பெரும் சான்றாகும். சிறுமியைக் கொன்ற வழக்கில் கஞ்சா பழக்கமுள்ள இளைஞனும், மதுபோதைக்கு அடிமையான முதியவரும் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் அதிகரித்துள்ள போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் செயலற்றத் தன்மையே சிறுமியின் மரணம் நிகழ மிக முக்கியக் காரணம் என்பது உறுதியாகிறது.
எனவே அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாக உள்ள மது மற்றும் போதைப்பொருளை முற்றிலுமாகத் தடை செய்து அவற்றின் புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த உடனடியாகக் கடும் நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் மட்டுமே இதுபோன்ற கொடுமைகள் இனியும் நிகழாமல் தடுக்க முடியும். மேலும், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான தண்டனைச் சட்டங்களைக் கடுமையாக்கி, அவர்கள் மீதான வழக்கை தனி நீதிமன்றங்கள் மூலம் விரைந்து விசாரித்துத் தண்டனையளிப்பதனால் மட்டுமே இத்தகைய குற்றங்களை அடியோடு சமூகத்திலிருந்து அகற்ற இயலும்.
நாமக்கல்லில் 10000 போதை மாத்திரைகள் பறிமுதல்; 15 கூலி தொழிலாளர்கள் கைது
ஆகவே, சிறுமியைக் கொன்று கொடுஞ்செயல் புரிந்த குற்றவாளிகளுக்கு, எவ்வித அரசியல் குறுக்கீடோ, அதிகாரத் துணைபுரிதலோ இல்லாமல் விரைந்து நீதி விசாரணையை முடித்து, மிகக்கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென புதுச்சேரி மாநில அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதோடு, பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் புரிவோர் குறித்துத் தயக்கமின்றித் துணிவுடன் உடனடியாகப் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் தெரிவிப்பது குறித்து மாணவ, மாணவியர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி – கல்லூரிகளில் மனநல மருத்துவர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.