புதுச்சேரியில் திடீரென கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தில் மீனவ மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பிள்ளை சாவடி, சின்னக்காலாபட்டு, பெரிய காலாப்பட்டு மீனவப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளில் அலைகள் சீற்றம் அதிகமாக காணப்படும் நேரங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள், மரங்கள், வலைகள் மற்றும் படகுகள் சேதம் அடைந்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதனால் இந்த பகுதியில் கடற்கரை பகுதியில் தூண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் பலகாலமாக போராட்டங்களை நடத்தி அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட காலப்பட்டு, சின்ன காலப்பட்டு, பெரிய காலப்பட்டு, பிள்ளை சாவடி, முதலியார் குப்பம், கூனிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென்று கடல் நீர்மட்டம் அதிகரித்து கடல் நீர் ஊருக்குள்ளே புகுந்தது.
இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் கடலில் இருந்து கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் அச்சமடைந்த பொதுமக்கள் சுனாமியாக இருக்கலாமா என்ற பயத்தில் வெளியில் ஓடி வந்து அனைவரும் கடற்கரையை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேலும் ஒரு சிலர் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு பாதுகாப்பான இடத்தை நோக்கியும் சென்று வருகின்றனர். திடீரென்று இன்று கடல் நீர் மட்டம் உயர்ந்து கடல் நீர் ஊருக்குள்ளே புகுந்ததால் மீனவ கிராமங்களில் ஒரு விதமான அச்சமும், பதற்றமும் ஏற்பட்டு உள்ளது.