புதுச்சேரியில் கேட்பாரின்றி கிடந்த ரூ.49 லட்சத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பணத்தை விட்டுச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி அண்ணாசாலை - செட்டிவீதி சந்திப்பில் அனாதையாக ஒரு பை கிடந்தது. நீண்ட நேரமாக ஒரே இடத்தில் பை கிடந்ததால் அந்த வழியே சென்ற மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் பையை சோதனையிட்டனர். பையில் கட்டு கட்டாக பணம் இருந்ததைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்தப் பணத்தை காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். பெரிய கடை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து அதை விடிய விடிய எண்ணியதில் ரூ.49 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
திருச்சியில் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு கம்பி நீட்டிய வடமாநில இளைஞர் ஓராண்டுக்கு பின் கைது
இதையடுத்து புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஒரு தரப்பினர் சாலையில் கிடந்தது தங்களது பணம் என்றும், திருப்பித் தர வேண்டும் என்றும் உரிமை கோரினர். அவரிடம் மாவட்ட நிர்வாகத்தினர், பணத்திற்கான ஆவணத்தை காண்பிக்கும்படி கூறினர். சாலையில் அனாதையாக கேட்பாறின்றி ரூ.49 லட்சம் பணம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.