புதுச்சேரியில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் நாய் அந்த இடத்தை விட்டு நகராமல் பாசப்போராட்டம் நடத்தியது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் பெர்ரி ரோட்டில் வசித்து வந்தவர் மண்டங்கி காஞ்சனா (23). இவர் அங்குள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் இருந்த தனது செல்லப் பிராணியான நாயை அழைத்துக் கொண்டு நடைபயிற்சி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கிளம்பிய, மண்டங்கி காஞ்சனா வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த தாய், உறவினர்கள் அவரை தேடி அலைந்தபோது மண்டங்கி காஞ்சனாவுடன் வந்த நாய், அங்குள்ள கோதாவரி ஆற்று பாலத்தின் மீது படுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்களது நாயை அடையாளம் கண்ட மண்டங்கி காஞ்சனாவின் குடும்பத்தினர் நாய் அருகில் சென்று பார்த்தபோது காஞ்சனா காலில் அணிந்து வந்திருந்த செருப்பு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது, காஞ்சனாவின் தாய், உறவினர்களை பார்த்த நாய், உடனே பாலத்தின் மீது நின்றவாறு கீழே ஓடும் ஆற்று நீரை பார்த்தபடி சுற்றிசுற்றி வந்தது. அதன்பிறகே மண்டங்கி காஞ்சனா, ஆற்றில் குதித்திருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்களுக்கு எழுந்தது உடனே ஏனாம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்ஐ நுக்கராஜூ தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் மண்டங்கி காஞ்சனாவின், அண்ணன் மண்டங்கி சுபாஷ் சந்திரபோஸிடம் புகாரை பெற்ற போலீசார், காணாமல் போன பிரிவில் வழக்குப்பதிவு செய்து காஞ்சனாவை தேடும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஈடுபட்டனர்.
இதனிடையே காஞ்சாவின் உடல் கோதாவரி ஆற்றில் இறந்த நிலையில் மிதப்பது தெரியவரவே, உடனே தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அதை மீட்ட ஏனாம் போலீசார், பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மண்டங்கி காஞ்சனா காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
நடைபயிற்சிக்கு வந்த இளம்பெண், கோதாவரி ஆற்றில் குதித்த தற்கொலை செய்த நிலையில், அந்த இடத்தைவிட்டு அகன்று செல்லாமல் அவரது செல்லப்பிராணியான நாய், அங்கேயே சுற்றிசுற்றி நின்றபடி பாசப் போராட்டம் நடத்தியது உறவினர்களிடம் மட்டுமின்றி அப்பகுதி மக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல. இதுபோன்ற எண்ணவோட்டம் இருக்கும் நபர்கள், அதற்கென்று இருக்கும் கவுன்சிலிங் சென்டருக்கு சென்று கலந்தாலோசித்து அந்த எண்ணத்தில் இருந்து விடுபடலாம் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.