புதுவையில் இன்று புத்தக பை இல்லா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வேறு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பள்ளியில் புத்தகப்பை இல்லா திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 2020ம் ஆண்டு வெளியிட்டது. அதன்படி ஆண்டிற்கு குறைந்தது 10 நாட்களாவது பள்ளிகளுக்கு மாணவர்கள் புத்தகப் பை இன்றி வர வேண்டும். இந்த நாட்களில் கைவினை, கலை, வினாடி வினா, விளையாட்டு, கைவினை பொருட்கள் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை சுட்டி காட்டி புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மாதத்தில் கடைசி வேலை நாளான்று bagless day எனப்படும் புத்தக பை இல்லாத நாள் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஜூலை 31ம் தேதி முதல் முறையாக இது கடைபிடிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக இன்று புத்தக பை இல்லாத நாள் கடைபிடிக்கப்பட்டது.
நகரத்தை போல கிராமப்புற பள்ளியான செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் புத்தக பை இல்லா நாளை மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பயனுள்ளதாக கழித்தனர். வகுப்புகளுக்கு வந்த மாணவர்களுக்கு கலை, ஓவியம், பாட்டு, கைவினை மற்றும் வினாடி வினா நிகழ்வுகள் நடத்தப்பட்டன.