சின்ன மோடி ரங்கசாமி கதையை பாஜக முடித்து விடும்: நாராயணசாமி பரபரப்பு பேச்சு!

By Manikanda Prabu  |  First Published Jul 9, 2023, 11:17 AM IST

புதுச்சேரியில் நடப்பதை வைத்து பார்த்தால் முதலமைச்சர் ரங்கசாமி இன்னும் கொஞ்ச காலம் கூட தள்ள மாட்டார்; அவரது கதையை பாஜக விரைவில் முடித்து விடும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தொடர்ந்து நீதி மறுக்கப்படுவதை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரும் எம்.பி-யுமான வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம், மத்திய அரசு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருவதை தடுத்து நிறுத்தவே மோடி அரசு சதி செய்வதாக குற்றம் சாட்டிய வைத்திலிங்கம், “மீண்டும் மோடி ஆட்சி வந்தால் பேசும் உரிமை போய்விடும். எப்படி துரியோதனன் சூழ்ச்சியை முறியடித்து ராமன் ஆட்சி அமைத்தானோ அது போன்று மோடி அரசின் சூழ்ச்சியை காங்கிரஸ் கட்சி வெல்லும் என்றார்.

Tap to resize

Latest Videos

undefined

மோடியிடம் பணபலம் அதிகார பலம் மட்டும்தான் உள்ளது ஆனால் ராகுல் காந்திக்கு நீதி, நேர்மை, மக்கள் பலம் உள்ளது. அதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்றும் வைத்திலிங்கம் பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுத்து சாலையில் இறங்கி ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறார். அதானிக்கும், அம்பானிக்கும் இருவருக்கும் தீகார் ஜெயில் தயராக இருக்கிறது என்றார்.

மோடியின் தம்பிதான் சின்னமோடி ரங்கசாமி என விமர்சித்த அவர், புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் பணிகள் ஒதுக்குவதற்காக 20% கமிஷனாக பெறப்படுகிறது, பார் உரிமை வழங்குவதில் பார் ஒன்றுக்கு இருபது லட்சம் ரூபாய் கமிஷன் பெறப்படுகிறது, முதல்வருக்கு உண்டான  பங்கு வந்துவிடுகிறது என்று குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் நில அபகரிப்பு வீடு அபகரிப்பில் தனியார் தான் ஈடுபட்டு வந்தார்கள், தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே ஈடுபட்டு வருகிறார்கள். எனவே வீட்டை பூட்டிவிட்டு யாரும் வெளியே சென்று விடாதீர்கள் வீட்டிற்கு உள்ளே பாஜக காரன் புகுந்து வீட்டை அபகரித்துக் கொள்வான் என்று நாராயணசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அரசு மருத்துவமனைக்கு கையுடன் சென்றால் கை இல்லாமல் வருகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி விளாசல்!

தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. லஞ்சம் கொடுப்பதாக சொன்னால் ராஜ்நிவாசையே ரங்கசாமி எழுதி கொடுத்து விடுவார். மாதாமாதம் முதல்வருக்கு கமிஷன் தொகை பெட்டி பெட்டியாக செல்கிறது. தற்போது வேலை இல்லா திண்டாட்டத்தால் மருத்துவர்களும், பொறியாளர்களும் கஞ்சா விற்கும் நிலைமைக்கு புதுச்சேரி தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரியில் டுபாக்கூர் தலைவராக உள்ள பாஜக தலைவர் சாமிநாதன் இரட்டை எஞ்சின் ஆட்சி என்கிறார். ஆனால் ஒவ்வொரு என்ஜினும் ஒரு பக்கம் செல்கிறது. புதுச்சேரியில் நடப்பதை வைத்து பார்த்தால் முதலமைச்சர் ரங்கசாமி இன்னும் கொஞ்ச காலம் கூட தள்ள மாட்டார். ஏனென்றால் பாஜக காரன் அவர் கதையை எப்படியும் முடித்து விடுவான்.” என்றார்.

எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் புதுச்சேரிக்கு விரைவில் சட்டமன்ற தேர்தலும் வரும் இதற்கும் காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் நாராயணசாமி அப்போது குறிப்பிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு லட்சம் வாக்கு வாக்கு வித்தியாசத்தில் வைத்தியலிங்கத்தை வெற்றி பெற வைத்தது போல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளரை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர் பஞ்சகாந்தி தலைமையில் காய்கறி விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வெண்டைக்காய், உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிவித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

click me!