புதுச்சேரியில் ஆளும் கட்சி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தனது பிறந்த நாளை சாலையை மறித்து பேனர்கள் வைத்து கொண்டாடியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
புதுச்சேரியில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகளவில் பேனர்கள், அலங்கார வளைவுகள் சாலைகளை மறைத்து வைக்கப்படுகிறது. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை யாரும் கண்டுகொள்வதில்லை. அரசும், அதிகாரிகளும், போலீஸாரும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர்தான் அதிகளவில் இப்பேனர்களை வைக்கின்றனர்.
முத்தியால்பேட் தொகுதியின் சுயேட்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார்(முதல்வர் ரங்கசாமியின் ஆதரவு எம்எல்ஏ) இன்று பிறந்தநாள் கொண்டாடினார். இதனால் அத்தொகுதியின் முக்கியச் சாலையில் அலங்கார வளைவுகள், பேனர்கள் வைத்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
தன்மானத்தை விட்டு அரசியல் செய்யவேண்டிய அவசியம் இல்லை - அண்ணாமலை அதிரடி
சாலையில் பெரும்பகுதியை பேனர்களும், அலங்கார வளைவுகளும் ஆக்கிரமித்தன. நன்றாக போடப்பட்டிருந்த சாலையை தோண்டி அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டிருந்து. மேலும் அச்சாலையின் ஒரு பகுதியை மறைத்து எம்எல்ஏ அலுவலகம் அருகே விழா மேடை அமைத்து பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாட, மறுபகுதியில் போக்குவரத்து பாதிப்பில் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
கடந்த வாரம் நகரில் பேனர்கள் வைத்தால் போலீஸார், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்த சூழலில் முக்கிய சாலையிலேயே இந்நிகழ்வை சுயேட்சை எம்எல்ஏ நடத்தியதுள்ளது குறிப்பிடத்தக்கது.