புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அரசு அதிகாரிகள் வரவேற்பிற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் தேசியக் கொடி தலைகீழாக இருந்த சம்பவம் 20 நாட்களுக்குப் பின் வைரலாகி வருகிறது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசு முறை பயணமாக கடந்த 7 மற்றும் 8ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் புதுச்சேரிக்கு வந்திருந்தார். அவரை வரவேற்கும் விதமாக புதுச்சேரி லாஸ்ப்பேட்டை ஏர்போர்ட் அருகே புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தலைவர் உருவம் பொறித்த பேனர்கள் வைக்கப்பட்டது.
அந்த பேனரில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் தேசியக் கொடியை தலைகீழாக அச்சிட்டு புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அந்த பேனரை வைத்துள்ளனர். குடியரசுத் தலைவரை வரவேற்று வைக்கப்பட்ட அந்த பேனர் இதுவரை அகற்றப்படாமல் இருந்துள்ள நிலையில் தற்போது பேனரில் தேசியக்கொடி தலைகீழாக அச்சிடப்பட்டதை போட்டோவாக எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
கேப்டன் கேப்டன் என்ற முழக்கம் விண்ணை பிளக்க பிறந்த நாளில் தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்
இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அரசு துறையின் அனைத்து அதிகாரிகளின் கவனங்களையும் ஈர்த்துள்ளது. மேலும் ஒரு நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமைமிக்க குடியரசுத் தலைவரை வரவேற்பதில் மெத்தனமாகவும், ஒரு தேசியக்கொடியை கூட எப்படி இருக்க வேண்டும் என்று தெரியாத அதிகாரிகளின் இந்த நிலையை சமூக ஆர்வலர்களும் கண்டித்து உள்ளனர்.
மேலும் இதுபோன்று அலட்சியமாக பணி செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.