புதுவையில் பெரிய மார்க்கெட்டை இடிக்க கடும் எதிர்ப்பு; திடீர் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

By Velmurugan s  |  First Published Jul 14, 2023, 6:10 PM IST

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரிய மார்க்கெட்டை மொத்தமாக இடித்துவிட்டு புதுப்பிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


புதுச்சேரியில் பெரிய மார்க்கெட் என்று அழைக்கப்படும் குபேர் அங்காடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 35 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பெரிய மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளை அரசு காலி செய்ய வலியுறுத்தியது. இதற்கு வியாபாரிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பெரிய மார்க்கெட்டை எந்த காரணம் கொண்டும் இடிக்க கூடாது. இருக்கும் நிலையிலேயே புதுப்பித்து தர வேண்டும் என வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என இரவோடு இரவாக அரசு தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும் மூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் அண்ணா சாலை நேரு வீதி நான்குமுனை சந்திப்பில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நான்கு பக்க சாலைகளையும் சூழ்ந்து கொண்டு அமர்ந்து அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Latest Videos

தந்தையை விசாரிக்க வந்த போலீஸ்; அச்சத்தில் ஓடி ஒழிந்த 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி 

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமாதான பேச்சு நடத்தினார்கள். ஆனால் இதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இருதரப்பிற்கும் கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து வியாபாரிகளை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்ததால் போராட்ட களமே போர்க்களமாக காட்சியளித்தது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது உயிரே போனாலும் மார்க்கெட்டை இடிக்க விடமாட்டோம் அப்படி இடிக்க வேண்டும் என்றால் தங்கள் பிணத்தை தாண்டி சென்று தான் அந்த மார்க்கெட் இடிக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தனர். மேலும் போலீசார் தங்களை கலைந்து செல்ல கூறாமல் அத்துமீறி தங்களை ஆபாசமாக பேசியதாகவும் பெண்கள் பரபரப்பாக குற்றம் சாட்டினார்கள்.

கோயம்பேட்டில் மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலி

வியாபாரிகள் திடீரென நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் நகர பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தை கைவிட்ட பிறகு போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர். இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா உடன் முதலமைச்சரை சந்தித்த வியாபாரிகள் திட்டத்தை வியாபாரிகள் நலன் கருதி உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதனை ஏற்றுக் கொண்ட அவர் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

click me!