புதுவையில் சட்டமன்ற உறுப்பினர் வீடுகளில் ரெய்டு நடத்திய போலி அமலாக்கத்துறை அதிகாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி உழவர்கரை தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிப்பவர் சிவசங்கரன். இவரது வீடு ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் பகுதியில் உள்ளது. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் சிவசங்கரனிடம், நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார். அதற்கு அவரும், தாராளமாக விசாரித்துக்கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
பின்னர் அடுத்த சில நிமிடங்களில் சிவசங்கரன் வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார். அந்த நபர் சிவசங்கரனிடம் தன்னை அமலாக்கதுறை அதிகாரி எனவும், போனில் பேசியது நான் தான் எனவும் கூறியுள்ளார். உடனே சிவசங்கரன், அடையாள அட்டையை கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் அடையாள அட்டை தற்போது கொண்டு வரவில்லை எனத்தெரிவித்துள்ளார்.
undefined
இதனால் அவர் மீது எம்.எல்.ஏ.வுக்கு சந்தேகம் எழுந்தது. உடனே ரெட்டியார்பாளையம் போலீசுக்கும், அவரின் அலுவலக ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் போலீசாரும், எம்.எல்.ஏ.வின் அலுவலக ஊழியர்களும் வீட்டிற்கு வந்தனர். இதையடுத்து அந்த நபரிடம், போலீசாரும், ஊழியர்களும் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலி அமலாக்க துறை அதிகாரிக்கு அங்கிருந்தவர்கள் தர்மஅடி கொடுத்து விசாரித்தனர். உடனே பயந்துபோன அந்த நபர் தான் அமலாக்கத்துறை அதிகாரி இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் (வயது35) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்தது.
அதாவது சிவசங்கர் எம்.எல்.ஏ.வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக முதலில் கருவடிக்குப்பம் மகாவீர் நகரில் உள்ள காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.வான கல்யாணசுந்தரம் வீட்டிற்கும் சென்று அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், 2-வதாக லாஸ்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் வீட்டிற்கும் சென்று பணபரிவர்த்தனை மோசடி (மணி லாண்டரி) தொடர்பாக புகார் வந்ததாகவும் உள்ளிட்ட காரணங்களை கூறியும், அந்த தவறை மறைக்கவும், உயர் அதிகாரிகளை சரிகட்டவும் 2 எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூ.1 லட்சம் லஞ்சம் தரவேண்டும் எனவும் பேரம் பேசியதாக விசாரணையில் தெரியவந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனக்கூறி பணம் கொடுக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு என்கிற குப்புசாமியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தன்னை அமலாக்க துறை அதிகாரி எனக்கூறி பேசியுள்ளார்,அதற்குள் அந்த நபர் போலீசில் சிக்கிக்கொண்டார்.
போலீசின் பிடியில் சிக்கியுள்ள திருவொற்றியூரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் கூகுளில் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிகளின் மொபைல் நம்பரை எடுத்துக்கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி என மிரட்டி வந்ததும் தெரிய வந்தது.
தமிழக அரசு அதிரடி நடவடிக்கை: தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி!
இதில் திருமாவளவன் எம்.பி உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தொலைபேசியில் தான் அமலாக்கத்துறை அதிகாரி என்று பேசியதும் தெரிய வந்துள்ளது. இது குறித்தும் புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.