திருமணம் செய்து கொள்வதாக அமெரிக்க பெண் ஆசைவார்த்தை கூறி, புதுச்சேரி டாக்டரிடம் ரூ.34½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி தோட்டக்கால் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 36). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணாகிவிட்டது. கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து பாலாஜி தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு 2வது திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக பாலாஜியின் தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். தொடர்ந்து பாலாஜியின் செல்போன் எண்ணுக்கு பல பெண்களிடம் இருந்து குறுந்தகவல் (மெசேஜ்) வரத்தொடங்கியது. அப்போது அவருக்கு சோமஸ்ரீ நாயக் என்ற ஒரு பெண் அறிமுகமாகியுள்ளார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் படுகொலை; மனைவி, கள்ளக்காதலன் கைது
அறிமுகமான பெண் தான் அமெரிக்காவில் மருத்துவம் படித்து முடித்துவிட்டு சிரியா நாட்டில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் மயங்கிய பாலாஜி, வாட்ஸ் அப் மூலம் நட்பாக பேச தொடங்கியுள்ளார். இருவருக்கும், ஒருவரை ஒருவர் பிடித்திருந்ததால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில் சோமஸ்ரீ தனக்கு பணத்தேவை இருப்பதாக கூறி பாலாஜியிடம் பல்வேறு தவணைகளாக ரூ.34 லட்சத்து 55 ஆயிரத்து 261 வாங்கியுள்ளார்.
பணம் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவர், சரியாக பாலாஜியிடம் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சோமஸ்ரீ மீது பாலாஜிக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அவரது டாக்டர் பதிவு எண் (ஐ.டி.) கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் எந்த பதிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவருடன் உரையாடுவதையும் நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலாஜி இதுகுறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.