9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டும் மற்றும் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் இந்தியா கூட்டணியும், அதிமுக சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தியும் புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் அதிமுக மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தனது வீடு முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சிறுமியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சிறுமி கொடூர கொலை.. புதுச்சேரியை உலுக்கிய சம்பவம்.. போதைப்பொருள் தான் அதற்கு காரணமா? சீரும் நடிகர் சரத்குமார்!
இதில், ஒரே சிசிடிவி பதிவில் மட்டுமே சிறுமி நடந்து செல்லும் வீடியோ பதிவாகி இருந்தது. இதனையடுத்து சிறுமி ஆர்த்தி சோலைநகரை விட்டு வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பது உறுதியானது. இந்நிலையில், 4 நாட்களுக்கு பிறகு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் மாயமான சிறுமி உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கருணாஸ் (19), விவேகானந்தன் (57) என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மறுபுறம் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் வகையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு நடந்த கொடூரத்தை கேட்டு நிலைகுலைந்துவிட்டேன்; குற்றவாளிகளுக்கு 1 வாரத்தில் தண்டணை - தமிழிசை
இந்நிலையில், 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டும் மற்றும் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் இந்தியா கூட்டணியும், அதிமுக சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழுஅடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி பங்கேற்கலாம். மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.