ஆதரவற்றவர்கள், ஏழை எளிய மக்களுக்காக உணவு உடை அளித்து பாதுகாக்கும் அட்சய பாத்திரம் திட்டத்தை தொடங்கிய புதுவை இளைஞர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
கொரோனா காலத்தில் சாலை ஓரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் ஒரு வேலைக்கு கூட உணவு இல்லாமல் தவித்து வந்தனர். இதனை பார்த்த புதுச்சேரி பசுமை துளிகள் ஆர்கனைசேஷன் நிர்வாகி சோரப் மற்றும் அவரது நண்பர் பிரான்சிஸ் உடன் இணைந்து அட்சய பாத்திரம் என்ற கம்யூனிட்டி பிரிட்ஜ் ஒன்றை சாலை ஓரத்தில் வைத்து அவர்களுக்கு உணவு பரிமாறும் திட்டத்தை தொடங்கினார்கள்.
இருப்பவர்கள் கொடுக்கலாம்; இல்லாதவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் பொது இடத்தில் சாலை ஓரத்தில் இந்த பிரிட்ஜ் நிறுவப்பட்டது. அதாவது வசதி படைத்தவர்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தேவையான உணவகளான ரொட்டி, பிஸ்கட், சாப்பாடு உள்ளிட்ட உணவு பொருள்களை அந்த ப்ரிட்ஜில் வைத்து விட்டு தன் முகவரியை எழுதி விட்டு செல்கின்றனர். அதேபோல், இந்த உணவு பொருட்கள் தேவைப்படுபவர்கள் அந்த பொருட்களை எடுத்து பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
மேலும் உணவு பொருட்களை பாதுகாக்க சிசிடிவி கேமரா மற்றும் அதை நிர்வகிக்க அதற்கென்று தனியாக ஒரு செக்யூரிட்டி ஆகியோரை நியமனம் செய்து இந்த நிறுவனம் இன்று வரை அதை மிகச் சிறப்பாக செய்து வருகிறது. அதன்படி, புதுச்சேரியில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஆதரவற்றவர்கள், ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
உணவுகள் மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள பயன்படுத்தப்பட்ட ஆடைகள் ஆகியவற்றையும் இதன் மூலம் பொதுமக்கள் தானாக முன்வந்து வைக்கிறார்கள். இல்லாதவர்கள் எடுத்துக்கொண்டு பயன் அடைகிறார்கள்.
பிரபல தனியார் நிறுவன பிஸ்கட்டில் முடி; பால் வியாபாரிக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றவர்ளுக்கு உணவு அளிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், 24 மணி நேரமும் செயல்படும் இந்த திட்டத்தினை மேலும் விரிவு படுத்தும் வகையில் ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அட்சய பாத்திரம் பிரிட்ஜ் வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். புதுவையில் தற்போது நான்கு இடங்களில் சாலை ஓரத்தில் பிரிட்ஜ்கள் அமைத்து உணவு, உடைகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் அவர்கள், மாநிலம் முழுவதும் ஆதரவற்றவர்களுக்கு உதவ முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.