முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். உகாண்டா அதிபரையும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மிஞ்சிவிட்டார் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டத்தைக் கண்டித்து இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று நேற்று எடப்பாடி பிரிவு அதிமுக அறிவித்து இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, புதுச்சேரி அதிமுகவினர் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஊர்வலமாக வந்து அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினையும், சபாநாயகர் அப்பாவுவையும் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
undefined
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அதிரடி கைது
இதில் நிர்வாகிகள் சுத்துக்கேணி பாஸ்கர், ரவி பாண்டுரங்கன், அன்பானந்தம் மற்றும் நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், ''ஜனநாயக முறைப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என எடப்பாடியார் வைத்த கோரிக்கையை ஏற்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மறுத்துவிட்டார். காந்திய வழியில் நடைபெறும் போராட்டத்திற்கு கூட அனுமதி வழங்கவில்லை என்றால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை மிக மோசமாக உள்ளது என்பதைத்தான் காட்டுகிறது. உகாண்டா அதிபரை விட மோசமாக ஸ்டாலின் செயல்படுகிறார். இதே நிலை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்படும். வரலாறு திரும்பும்'' என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கு மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.