புதுச்சேரி பாஜகவினர் ஓட்டுக்கு 500 காங்கிரஸார் ஓட்டுக்கு 200 வழங்குகின்றனர். தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை.. தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தன் தெரிவித்துள்ளார்.
இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு நிறைவடைகிறது. நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று காலை முதல் வாக்காளர்கள் வீதி வீதியாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயமும், காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கமும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர், இந்த சூழ்நிலையில், அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்தில் வாக்கு சேகரிப்பிற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன், புதுச்சேரியில் ஓட்டிற்கு பணம் வழங்காமல் நேர்மையாக தேர்தல் நடக்கும் என்று தான் அதிமுக சார்பில் களம் இறங்கினேன்.
undefined
பாஜக ரூ500.. காங்கிரஸ் ரூ200
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாயும், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ஒரு ஓட்டுக்கு 200-ம் கொடுத்துவருகின்றனர். இது தேர்தலை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். தேர்தல் என்பது மிக மிக நேர்மையாக நடைபெற வேண்டும். அடுத்து வரும் சமுதாயத்திற்கு வழி வகுக்க வேண்டிய தேர்தல் பணம் கொடுத்து தான் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவேண்டும் என்பதால் இந்த தேர்தலை புறக்கணிக்கிறேன் என்று ஆவேசமாக தெரிவித்தார்.
தேர்தலை புறக்கணிக்கிறேன்
நான் இதே இடத்தில் அமர்ந்திருக்கிறேன் நான் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஆவேசமாக சவால் விடுத்தார். புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை எனவே இந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்த தமிழ் வேந்தன் ஆதாரத்துடன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.