மின் துறை மற்றும் மதுவிலக்கு துறையில் அதிகளவு முறைகேடு நடைபெற்றதாக வந்த தகவலையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுகவில் முக்கியத்துவம் பெறும் வகையில் செந்தில் பாலாஜி உருவானது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
செந்தில் பாலாஜி அரசியல் வாழ்க்கை
கரூர் மாவட்டத்தில் ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த வி. செந்தில்குமார் தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார். அரசியல் மீது இருந்த ஆர்வம் காரணமாக 1995ஆம் ஆண்டில் தனது கல்லூரி படிப்பை இடைநிறுத்தம் செய்த செந்தில் பாலாஜி தனது அரசியல் வாழ்க்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடங்கினார். ஆனால் அங்கு தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் 2000ஆம் ஆண்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதனையடுத்து செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்து படிப்படியாக கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என தனது அரசியல் வாழ்க்கையில் உயரத்தை நோக்கி சென்றார்.
அதிமுக டூ திமுக
2006ஆம் ஆண்டில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து மீண்டும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கி ஜெயலலிதா அழகு பார்த்தார். ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகவும், செல்லப்பிள்ளையாகவும் இருந்தார். ஆனால் 2015 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜிக்கு இறங்கு முகம் தொடங்கியது, அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவால் செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார்.
இதனையடுத்து 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு கரூர் தொகுதியிலும், செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி தொகுதியிலும் மாற்றி தொகுதி வழங்கப்பட்டது. அப்போது தேர்தல் நேரத்தில் அதிகளவு பணப்பட்டுவாடா பிரச்சனை காரணமாக அரவக்குறிச்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் நடைபெற்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.
அமைச்சராக பதவியேற்ற செந்தில் பாலாஜி
அந்த காலகட்டத்தில் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காவடி எடுப்பது, மன் சோறு சாப்பிடுவது, பால் குடம் எடுப்பது என தனது கடவுளை வேண்டி பிராத்தனை செய்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி தினகரன் அணியில் இருந்த செந்தில் பாலாஜியின் பதவியானது எடப்பாடி பழனிசாமியால் பறிக்கப்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரனோடு ஏற்பட்ட அதிருப்தி மற்றும் தனது அடுத்தகட்ட அரசியல் வாழ்க்கையை கருத்தில் கொண்டு தனது ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்தார். இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
செந்தில் பாலாஜி மீது தொடரும் புகார்
தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் எம்எல்ஏவாக தேர்வான செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கப்பட்டது.திமுகவின் மூத்த தலைவர்கள் பலருக்கு டம்மியான துறை ஒதுக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறை ஒதுக்கப்பட்டது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் நெருக்கமாக இருந்தவர் மீது பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. மதுபானங்களுக்கு முறையான வரி செலுத்தாமல் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
வருமான வரித்துறை சோதனை
டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லையென்றும், இதுபோன்ற முறைகேடுகளால், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக தமிழக ஆளுநரிடம் அதிமுக, பாஜக, புதிய தமிழகம் குற்றம்சாட்டியிருந்தது. இதனையடுத்து தான் வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்