பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வரும் நிலையில், பிரசாந்த் கிஷோர் அவரை விமர்சித்துள்ளார்.
அடுத்து ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வரும் அவர், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார். இந்த சூழலில் நேற்று முன் தினம் மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்தார்.
இந்த நிலையில் நிதிஷ்குமாரின் இந்த சந்திப்பு குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கோள் காட்டி, பீகார் முதல்வரும் அதையே செய்ய முயற்சிக்கிறார் என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.
இதையும் படிங்க : திமுகவுக்கும் பாஜகவுக்கும் இதுதான் வித்தியாசம்! மற்றொரு பிடிஆர் ஆடியோ வெளியிட்டு அண்ணாமலை ட்வீட்
தொடர்ந்து பேசிய அவர் “ 2019-ல் சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில் அவர் பெரும்பான்மை அரசாங்கத்தை நடத்தி வந்தார். ஆனால் தற்போது நிதிஷ்குமார் ஊனமுற்ற அரசாங்கத்தை நடத்தி வருகிறார். சந்திரபாபு நாயுடுவும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார். ஆனால் மக்களவை தேர்தலில் தெலுங்க தேச எம்.பிக்களின் எண்ணிக்கை 3-ஆக குறைந்தது. சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் மட்டுமே வென்றது. சந்திர பாபு நாயுடுவுக்கு நடந்தது தான் நிதிஷ்குமாருக்கும் நடக்கும்.
நிதிஷ்குமார் பீகாரைப் பற்றி கவலைப்பட வேண்டும். ஒரு எம்.பி. கூட இல்லாத கட்சி, அவர்கள் நாட்டின் பிரதமரைத் தீர்மானிக்கிறார்கள். அரசியலில் இடமில்லாதவர், அனைவரையும் ஒருங்கிணைக்கிறார்.” என்று தெரிவித்தார்.
இதே போல் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவையும் பிரசாந்த் கிஷோர் விமர்சித்தார். இதுகுறித்து பேசிய அவர் “ முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே 10 லட்சம் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார். அவரால் 10 லட்சம் வேலைவாய்ப்பு வழங்க முடியாது என்று அனைவருக்கும் தெரியும்.” என்று தெரிவித்தார்.
மேலும், பாஜகவை விமர்சித்த பிரசாந்த் கிஷோர் , “இந்தியாவின் வளர்ச்சிக்காக பாஜக எதுவும் செய்யவில்லை, பாஜக ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த விளம்பரத்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க : மணல் கொள்ளையை தடுத்த விஏஓ கொலை! எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.. போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்