தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில், இன்று மதியம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி சென்ற ஆர்என் ரவி
தமிழக அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து டெல்லிக்கு செல்ல இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்ட ஆளுநர் மூன்று நாள் பயணமாக சென்றுள்ள நிலையில் நாளை மறுநாள் சென்னை திரும்ப உள்ளார். தனிப்பட்ட பயணமாக இந்த பயணம் இருக்கும் என ஆளுநர் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் இந்த பயணத்தில் மத்திய அரசின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமித் ஷாவை சந்திக்கும் இபிஎஸ்
இதே போல அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் எடப்பாடி தரப்பு உற்சாகமாக உள்ளது. இதனிடையே இபிஎஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தெரிகிறது.
குடியரசு தலைவரை சந்திக்கும் ஸ்டாலின்
மேலும் அதிமுக அலுவலக கட்டிடம் டெல்லியில் கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் திறப்பு விழா குறித்தும் டெல்லி பயணத்தின் போது முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் ரவி மற்றும் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவுள்ள நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை டெல்லி செல்லும் முதலமைச்சர் நாளை மறுதினம் குடியரசு தலைவரை திரௌபதி முர்முவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆளுநர் மீது புகாரா.?
இந்த சந்திப்பின் போது தமிழக ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக புகார் அளிக்க இருப்பதாக தெரிகிறது . மேலும் நீட் மசோதா தொடர்பாக விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் முக்கிய தலைவர்களாக இருக்க கூடிய ஆளுநர் ரவி, எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்த டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்