ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும், மாற்றி மாற்றி எதிரணியின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுத்து, பதவி கொடுத்து வருகின்றனர்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் ஒரே ஒரு வழக்கு மட்டுமே நடப்பது போல தோன்றலாம். ஆனால் உள்ளே பல மோதல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
கடந்த வாரம் அதிமுக ஓ பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது போட்டி பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை செய்தனர். ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சமீபத்தில் ஓபிஎஸ் நியமித்தார்.
இதையடுத்து அவர் வழிகாட்டுதலின் பெயரில், தற்போது அவரின் தலைமையில்தான் இந்த கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார். ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அலுவலகத்தில் இன்று கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க.. TN BJP : துபாய் ஹோட்டலில் 150 பேரு முன்னாடி.! உண்மையை சொல்லுங்க அண்ணாமலை? காயத்ரி ரகுராம் பகீர்!
கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை அதிமுகவினரிடம் விசாரித்தோம். கூட்டத்தில் சில நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். அதிமுக தலைமையில் கூட்டணி இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்பியுமான சி.வி சண்முகம் பேசிய போது, பாஜக நம் கூட்டணியில் இருந்தால் சிறுபான்மையினர் ஓட்டு கொஞ்சம் கூட கிடைக்காது. தயவு செய்து பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.
ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரிடம் இருக்கும் நமது முன்னாள் நிர்வாகிகளை திரும்ப அழைக்க வேண்டும் என்று கூற, சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, மு.க ஸ்டாலின் சில்வர் ஸ்பூனில் பிறந்த அரசியல்வாதி. அவரது தந்தை ஒரு முதல்வர். கட்சிப் படிநிலையில் அடிமட்டத்தில் இருக்கும் கட்சித் தொண்டனின் சிரமத்தை அவரால் புரிந்து கொள்ள முடியாது. அதேபோல அவரது மகனான உதயநிதியையும் அமைச்சராக்கியுள்ளனர்.
அதிமுகவில், அடிமட்ட தொழிலாளி கூட உயர முடியும். ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் திமுகவின் ஏஜெண்டுகளாக மாறிவிட்டன. நமது பணி, பொதுமக்களை சென்றடைய வேண்டும், திமுகவின் பொய் வழக்குகளை எதிர்க்க வேண்டும். பிரதான ஊடகங்கள் நமக்கு எதிராக இருப்பதால், 3 மாவட்டங்களுக்கு ஒரு யூடியூப் சேனல் அதிமுக மாவட்டச் செயலாளர்களால் திறக்கப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.
அடுத்து கூட்டத்தில் பேசிய அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அம்மாவின் ஆட்சியை தொடர்ந்து வழிநடத்தும் தலைவராக, எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை என்று கூறினார். அதிமுகவின் மூத்த தலைவர் நத்தம் விஸ்வநாதன் பேசும் போது, ஓபிஎஸ்-க்கு அவரது இரு மகன்கள்தான் கவலை, கட்சி அல்ல. அதிமுக தொண்டர்கள் நலனில் அவருக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர் தொண்டர்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகிறார் என்று பேசினார் என்றும் கூறினார்கள் நிர்வாகிகள்.
இதையும் படிங்க.. AIADMK : கூட்டணியை நாங்க பார்த்துக்குறோம்.. மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி? எடப்பாடி பழனிசாமி அதிரடி