AIADMK : மாநில முக்குலத்தோர் இளைஞர் பாசறை பெயரில் அதிமுகவின் முதல் எம்பியும், இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்த முன்னாள் எம்பியுமான கே.மாயத்தேவர் பெயருடன் ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு
சென்னையில் கடந்த 23-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற இப்பொதுக் குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றவும் ஒப்புதல் தரப்படவில்லை. அத்துடன் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில்கள், பேப்பர் உருண்டைகள் வீசப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்தின் பிரசார வேனின் டயரும் பஞ்சராக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : AIADMK : அதிமுக அலுவலகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இபிஎஸ் போட்டோ.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்
இபிஎஸ் Vs ஓபிஎஸ்
அதிமுகவில் ஏற்பட்ட மோதலையடுத்து தமிழகம் முழுவதும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடியின் படத்தையும் உடைத்தும், மையால் அழித்தும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் ஆகிய இருவருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மாநில முக்குலத்தோர் இளைஞர் பாசறை பெயரில் அதிமுகவின் முதல் எம்பியும், இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்த முன்னாள் எம்பியுமான கே.மாயத்தேவர் பெயருடன் ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இது அப்பகுதி முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக வட்டாரங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இரட்டை இலை சின்னம்
இதுகுறித்து சின்னாளபட்டி எல்லப்பட்டியைச் சேர்ந்த அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை முன்னாள் தலைவர் ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘கே.மாயத்தேவர் மகன் செந்தில் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்படுவார்’ என்று கூறினார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்கள் உடனடியாக போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் மன உளைச்சலில் இருக்கிறாரா? எங்களுக்கு தான் மன உளைச்சல்.. பீல் பண்ணிய ஜெயக்குமார்
அந்த போஸ்டரில், ‘இரட்டை இலை சின்னத்தை வாங்கியதே நாங்க தான்’ என ஓபிஎஸ்க்கு ஆதரவாக அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசனின் அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களை சுற்றிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் இரட்டை இலை சின்னம் வாங்கிக் கொடுத்ததே நாங்க தான், 'எவனுக்கும் அஞ்ச மாட்டோம், எவனுக்கு விட்டுத் தர மாட்டோம்' என மாயத்தேவர் புகைப்படத்துடன், மாநில முக்குலத்தோர் பாசறை சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
யார் இந்த மாயத்தேவர் ?
எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டில் அதிமுகவை தொடங்கியவுடன் முதன்முதலாக திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளராக மாயத்தேவரை நிறுத்தினார். அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்று அமோக வெற்றி பெற்றார். அன்று முதல் அதிமுகவின் சின்னம் ஆகிவிட்டது இரட்டை இலைச் சின்னம்.அதன் பின்னர் மாயத்தேவர் மூன்று முறை இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த இரட்டை இலை சின்னம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் ஆதரவு என்பது தொண்டர்களின் நம்பிக்கை. அந்த வகையில் ஓபிஎஸ் ஐ அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி விட்டால் சின்னம் முடக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இரட்டை இலை சின்னத்துக்கு இபிஎஸ்,ஓபிஎஸ் அடித்துக்கொண்டிருக்க மாயத்தேவர் போஸ்டர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி அதிமுக தொண்டர்களிடம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்