தனிச்சின்னம் என்ற பேச்சுக்கே இடமில்லை; இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - ஓ.பன்னீர்செல்வம்

By Velmurugan s  |  First Published Feb 5, 2024, 5:38 PM IST

தனிச் சின்னம் என்கிற பேச்சுக்கே இடமில்லை, நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


அதிமுக ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை காமராசர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன், புகழேந்தி ஆகியோர் பஙகேற்றனர். கூட்டத்தில் புகழேந்தி பேசுகையில் "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக அழிந்து விடக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமியை இணைந்து போக அழைப்பு விடுக்கப்பட்டது. 

ஆனால் நாய் வாலை நிமிர்த்த முடியுமா? எடப்பாடி பழனிச்சாமி இணைந்து செல்ல சம்மதிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் கைய்யப்பமிட்ட ஏ மற்றும் பி பார்ம் வைத்து ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் ஆகியோர் எம்.எல்.ஏ க்களாக வெற்றி பெற்றனர். பன்னீர்செல்வத்தால் வெற்றி பெற்ற 4 பேருக்கும் மானம் இருந்தால் ராஜினாமா செய்ய முடியுமா? எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை உடைத்து அழிக்க நினைக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி எனும் சர்வாதிகாரியை ஒழிக்கும் வரை நாம் கடுமையாக போராட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி அணியினரை தோற்கடிக்க பாடுபட வேண்டும்" என பேசினார். 

Tap to resize

Latest Videos

என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி; எங்கள் பலத்தை தமிழகம் 25ம் தேதி பார்க்கும் - பாஜக

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் பேசுகையில் "ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே கட்சி, ஆட்சிக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை எற்க என்ன அவசரம்? ஒற்றை தலைமை ஏற்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவா? கூட்டணிக்கு யாராவது வருவார்களா என எடப்பாடி பழனிச்சாமி கடை விரித்து உட்கார்ந்து இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி பின்னால் இருப்பவர்களுக்கு யாருக்கும் முதுகெலும்பு இல்லை" என பேசினார். 

இறுதியாக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் "தேர்தல் மூலமாகவே அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர் கட்சி விதிகளை கொண்டு வந்தார். எடப்பாடி பழனிச்சாமி எனும் சர்வாதிகாரி போலியான பொதுக் குழுவை கூட்டி பொதுச்செயலாளராக அறிவித்து கொண்டார். எம்.ஜி.ஆர் கொண்டு வந்த விதிகளை எடப்பாடி பழனிச்சாமி காலில் போட்டு மிதித்துள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமியை தேர்தலில் இருந்து ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியது சின்னம்மா, எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து ஊர்ந்து சென்று முதல்வர் ஆனார். அதிமுகவுக்காக எடப்பாடி பழனிச்சாமி என்ன தியாகம் செய்தார்? அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா என பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றரை கோடி தொண்டர்கள் ஏகமனதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 ஆம் ஆண்டு வரை உள்ளது. ஜெயலலிதா சொல்லும் சொல்லை மீறாத தொண்டனாக அதிமுகவில் இருந்துள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு வந்த பின்னர் 8 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்து உள்ளது. ஒரு தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். வழிகாட்டு குழுவில் முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி ஒத்துழைக்கவில்லை. அதிமுகவில் தான்தோன்றி தனமாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். 

மாஸாக டிராக்டரில் வந்து உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்யவில்லை என்றால் தொண்டர்கள் அவரை தூக்கி எறிவார்கள். எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறுக்காக தண்டனை அனுபவிப்பார். ஜெயக்குமார் நாவை அடிக்கி பேச வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழகத்துக்குள் எங்கும் நடமாட முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் நம்முடன் கூட்டணி வைத்து போட்டியிட சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க போராடி வருகிறோம். நீதிமன்ற தீர்ப்புகள் தற்காலிகமானது. நிரந்தர தீர்ப்புகள் வரவில்லை. நிலைமையை புரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுக உருவாக்கப்படும்" என பேசினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒ.பன்னீர்செல்வம் கூறுகையில்"நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி படுதோல்வி அடையப்போவது உறுதி, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஏற்கனவே அங்கம் வகித்து உள்ளோம். நாங்கள் தனித்து நிற்கப் போவதில்லை. கூட்டணியில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறோம். பத்தாண்டு காலம் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். 

இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடி வருவார். மோடி பிரதமராக வருவதற்கு அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளித்து வருகிறோம். உலகத்தில் உள்ள 200 வளர்ந்த நாடுகள் மோடியின் நிர்வாகத் திறமையை பாராட்டுகிறது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்திருக்கிறது. ஆகவே மோடி பிரதமராக வரவேண்டும் என பாடுபட்டு வருகிறோம். இரட்டை இலை சின்னம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டது. அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என இரட்டை இலையை உரிமை கோர முடியும், அந்த உரிமையின் அடிப்படையில் இரட்டை இலையை கேட்போம். எங்களுக்கு தான் இரட்டை இலை கிடைக்கும். 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும். தனிச் சின்னம் என்கிற கேள்விக்கு இடம் இல்லை. நாங்கள் தான் இரட்டை இலை சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். 

click me!