திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து! திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம்! இபிஎஸ் விளாசல்

By vinoth kumar  |  First Published Nov 24, 2023, 6:38 AM IST

திருவண்ணாமலை வரலாற்றில் திருத்தேரோட்டத்தின் போது இதுவரை மின் கசிவு ஏற்பட்டு பக்தர்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்ததில்லை.


திருவண்ணாமலை திருத்தேரோட்டப் பாதையில் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நேற்று மாலை பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் பவனியின் போது ஏற்பட்ட மின் கசிவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும், 8 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். திருவண்ணாமலை வரலாற்றில் திருத்தேரோட்டத்தின் போது இதுவரை மின் கசிவு ஏற்பட்டு பக்தர்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்ததில்லை.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பொதுவாக, இதுபோன்ற திருத்தேர் பவனியின் போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, போதிய முன்னெச்சரிக்கையுடன் தேரோட்டம் நடைபெறும். ஆனால், நேற்று நடந்த மின் கசிவினால் ஏற்பட்ட இந்த விபத்து, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை குறிப்பாக, அறநிலையத் துறை, மின்சாரத் துறை மற்றும் காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றின் தோல்வியையே காட்டுகிறது.

இதையும் படிங்க;- கார்த்திகை தீபம் 2023 அன்று என்ன செய்ய வேண்டும்? எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் தெரியுமா?

ஏற்கெனவே, திமுக அரசின் 30 மாத கால ஆட்சியில், தேரோட்டம் மற்றும் திருக்கோயில் விழாக்களின்போது விபத்துகள் ஏற்பட்ட சமயங்களில் நான், இனிவரும் காலங்களில் தேரோட்டங்களின் போதும், திருக்கோயில் விழாக்களின் போதும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறநிலையத் துறையை வலியுறுத்தி இருந்தேன்.

இதையும் படிங்க;- திருவண்ணாமலை பரணி தீபம், மகா தீபம்.. ஆன்லைனில் அனுமதி சீட்டு பெறுவது எப்படி? எப்போது விற்பனை தொடக்கம்?

ஆனால், நேற்று நடந்த நிகழ்வைப் பார்க்கும்போது, திருவண்ணாமலை திருத்தேரோட்டப் பாதையில் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இனியாவது, திமுக அரசு விழித்துக்கொண்டு இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க வலியுறுத்துகிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

click me!