அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், வெளிநாட்டு கரன்சிகள், இந்திய ரூபாய்கள். நகைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை
கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியின், கனிமவள அமைச்சராக இருந்த பொன்முடி, விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் விதிமுறைகளுக்கு மாறாக தனது மகனுக்கே குவாரி ஒப்பந்தம் வழங்கியதாகவும், குவாரியில் அரசு அனுமதித்த அளவை விட அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாகவும் இதன் காரணமாக அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கானது நடைபெற்று வருகிறது.
சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்
சென்னையில் உள்ள வீட்டில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி, அவரது மகன் அசோக் சிகாமணி ஆகியோர் இருந்துள்ளனர். அவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் வைத்தே தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். இதனையடுத்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு நுங்கம்பாக்கதில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று வாக்குமூலம் பெற்றனர். இதனையடுத்து பொன்முடியை விடுவித்த அதிகாரிகள், இன்று மாலை மீண்டும் அமலாக்கத்துறை முன்பாக ஆஜராக உத்தரவிட்டனர். முன்னதாக அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணியின் சொகுசு காரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சொகுசு காரில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும், இதனால் சொகுசு காரை பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
சோதனையில் சிக்கிய வெளிநாட்டு கரன்சிகள்
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கணக்கில் காட்டப்படாத பணம் என்பதால், அந்தத் தொகையை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பான அதிகாரி, வங்கிக் கணக்கு விவரங்கள் தொடர்பான அதிகாரிகள் மற்றும் இந்தியன் வங்கியின் நகை மதிப்பீட்டாளர்களையும் அமலாக்கத்துறையினர் அழைத்து வந்து பணம் மற்றும் நகைகள் மதிப்பிடப்பட்டது.
மேலும் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் ரூ.41.9 கோடி வைப்புத் தொகை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்து உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், வைப்புத் தொகை தவிர்த்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில்அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்